On This Day in History May 18, 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில் …Important Events Of may-18

On This Day in History May 18, 2019 வரலாற்றில் இன்று பிறந்தவர்கள் மற்றும் மறைந்தவர்கள் இன்றைய நாளின் சிறப்புகள் ஒரே பதிவில் …Important Events Of may-18

 

இன்றைய கூகுள் டூடுலை அலங்கரிப்பவர் யார் தெரியுமா? பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம்

பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) பிறந்த தினம் இன்று.

உமர் கய்யாமின் 971வது பிறந்தநாளை முன்னிட்டு டூடுல் வெளியிட்ட கூகுள் அவரைப்பற்றி பார்க்கலாம்…

பெர்ஷியாவின் குராசன் மாகாணத் தலைநகர் நிஷாப்பூரில் (தற்போது ஈரானில் உள்ளது) 1048-ல் பிறந்தார். கூடாரம் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்தவர் என்று கருதப்படுகிறது. வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் என்ற நகரில் சிறு வயதில் சில காலம் வசித்தார்.

ஷேக் முகமது மன்சூரி என்பவரிடம் கல்வி கற்றார். பின்னர் குராசன் பகுதியின் சிறந்த ஆசிரியரான இமாம் மோவாபாக் நிஷாபுரியிடம் கல்வி பயின்றார். தத்துவமும் கற்றார். மிகச் சிறந்த கணிதவியலாளரான இவர், எண்கணிதம், இசை, இயற்கணிதம் குறித்த புத்தகங்களை 25 வயதுக்குள் எழுதினார்.

உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் என்ற இடத்தில் 1070-ல் குடியேறினார். அங்கு இவருக்கு அபுதாஹிர் என்பவரின் ஆதரவு கிடைத்தது. பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும் புகழ்பெற்றார்.

தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக்கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்குவரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். தனது துணிச்சலான கருத்துகளால் பல எதிர்ப்புகளை சந்தித்தார்.

இவர் வித்தியாசமான கவிஞர். கடவுள், ரோஜா மலர்கள், திராட்சை ரசம், அதை ஊற்றும் இளம்பெண்கள் இவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட இவரது கவிதைகளில் வேதாந்தமும் பரவிக் கிடக்கிறது. மதுவைப் பற்றி மிக அற்புதமாக பாடியுள்ளார். உமர் கய்யாமை நாத்திகவாதி என்று கூறுபவர்களும் உண்டு.

இயற்கணிதப் புதிர்களுக்கான செயல்விளக்கம் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். அதில் முப்படிச் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான வடிவியல் முறையை வகுத்தார். இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியையும் தந்தார். இவர் இயற்றிய இயற்கணக்கியல், பெர்ஷியாவில் பாடநூலாகப் பயன்படுத்தப்பட்டது.

நாள்காட்டி சீர்திருத்தத்துக்காக வானியல் ஆய்வுகள் மேற்கொள்ள சுல்தான் மாலிக் ஷா இவரை அழைத்தார். இதற்காக எஸ்ஃபகான் என்ற இடத்தில் ஒரு கண்காணிப்பு மையம் நிறுவப்பட்டது.

நாள்காட்டியில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு ஜலாலி (Jalali) என்ற புதிய நாள்காட்டி உருவாக்கப்பட்டது. ஓராண்டு என்பது 365.24219858156 நாட்கள் என்று துல்லியமாக கணக்கிட்டார் உமர் கய்யாம்.

நாட்டில் 1092-ல் புரட்சி உருவானது. பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். மாலிக்கும் இறந்தார். ஆட்சி கைமாறியது. வானியல் ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டது. அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இவரை நாத்திகவாதி என்றனர் புரட்சியாளர்கள். இவரும் தாக்கப்பட்டார். தன் எண்ணங்களைக் கவிதைகளாக வடித்தார்.

இவரது நான்குவரிக் கவிதைகளை ஆங்கில எழுத்தாளர் எட்வர்டு ஃபிட்ஸ்ஜெரால்டு மொழிபெயர்த்து, ‘ரூபயாத் ஆஃப் உமர் கய்யாம்’ என்ற கவிதைத் தொகுப்பாக 1859-ல் வெளியிட்டார். அது உலகப் புகழ் பெற்றது. தத்துவவாதி, வானியலாளர், கணிதவியலாளர் என பன்முகத் திறன் கொண்டிருந்த உமர் கய்யாம் 83 வயதில் (1131) மறைந்தார்.

சர்வதேச அருங்காட்சியக தினம்

(International Museum Day)

🙏🚦🔔✍�அருங்காட்சியகங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகளவில் சர்வதேச அருங்காட்சியக ஆலோசனை சபை என்கிற அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்புடன் உலகில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தொடர்பு வைத்துள்ளன. 1978ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கொண்டாடப்படுகிறது🙏🙏🙏🙏

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

(World AIDS Vaccine Day)

👉📡🙏எச்.ஐ.வி. தொற்று மற்றும் எய்ட்ஸை தடுக்க தடுப்பூசி மிக அவசியமான, அவசரத் தேவையாக உள்ளது. இதனை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் முயன்று வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிப்பதன்மூலம் எய்ட்ஸ் ஆபத்தைக் குறைக்க முடியும். இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த 1998ஆம் ஆண்டிலிருந்து மே 18 அன்று எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது🙏🙏🙏🙏🚦💯📡

🎯பாலசிங்கம் நடேசன் உயிரிழந்த நாளின்று😓

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் முல்லைத்தீவில் முள்ளி வாய்க்கால் என்ற இடத்தில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி, புலிகளின் அமைதிச் செயலகப் பொறுப்பாளர் சீ. புலித்தேவன் ஆகியோரும் 2009ம் ஆண்டு இதே நாளில் (மே 18) சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நடேசன் முன்னர் இலங்கை காவல்துறையில் பணிபுரிந்தவர். தலைநகர் கொழும்பில் உள்ள நாரகேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விசித்திரா என்ற சிங்களப் பெண்ணைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். விசித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர்.

1983-ம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப்படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர். அந்தக்காலப் பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார்.

1990-ல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன், 1991-ல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தொடங்கியபோது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2007, நவம்பர் 2-ம் நாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் இறப்பை அடுத்து நடேசன் அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மே 18 (2009) அதிகாலை 5:45 மணி வரை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக புலிகளின் பேச்சாளர் செல்லப்பா பத்மநாதன் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச் செயலரின் உயரதிகாரி விஜய் நம்பியார், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உறுதியளித்தன் பேரில் நடேசன், புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி உட்பட பொதுமக்கள் சிலர் வெள்ளைக் கொடியைத் தாங்கி சரணடைய வெளியே வந்தபோது அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் நடேசன், புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.