3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா..? பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..?

2017ம் ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. சிறையில் இன்றோடு 550 நாட்களை கடக்கும் அவருக்கு இன்று 61 வது பிறந்த நாள்.

30 ஆண்டுகளாக உடனிருந்த உயிர்த்தோழி ஜெயலலிதா கடந்த இரண்டு பிறந்த நாட்களாக இல்லாமல் ’திண்டாடி’ வருகிறார் சசிகலா. சிறையில் இளவரசியோடு கொண்டாடும் சூழ்நிலை. அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலா அந்தப்பதவியில் இருந்து ஒரு முறைகூட பிறந்த நாளை கொண்டாட வாய்க்கவில்லை. ஆனால், அ.ம.மு.க பொதுச்செயலாளராக இது அவருக்கு முதல் பிறந்த நாள். கணவர் நடராஜனை இழந்த பின் வரும் பிறந்த நாளும்கூட…

’ஆரம்பத்தில் சிறைவாசம் படுத்தி எடுத்ததில் தள்ளாடி போன அவர், இப்போது மெல்ல நிதானமாகி வருகிறார். ’அது போகப்போக பழகிப்போன’ விஷயத்தால் வந்தது அல்ல. குரு பெயர்ச்சியால் வந்த குஷி’’ என்கிறார்கள் அவரது உறவினர்கள். ஆரம்பத்தில் ஜெயலலிதா தனது ராசியான நம்பராக 9 ம் எண்ணை கருதி வந்தார். இடையில் 7 ம் நம்பரை ராசியாக நம்பினார். இறுதியில் 11 ம் நம்பரை கடைபிடித்தார். ஆனால், எப்போதும் தனக்கு ராசியான நம்பராக சசிகலா நம்புவது -7. அதுதான் சசிகலாவின் குஷிக்கு காரணம் என்கிறார்கள்.

’இது அவருக்கு 61 வது பிறந்த நாள். இதன் கூட்டுத் தொகை 7. சசிகலாவின் கைதி எண் 9934. இதன் கூட்டுத் தொகை-7 அதுமட்டுமல்ல இந்த பிறந்த நாளுக்கு பிறகு அவரது ராசிக்கு குருபெயர்ச்சி செய்கிறார். எல்லாம் அவருக்கு சாதகமாக நடந்து வருகிறது. இதனால், தோராயமாக ஒன்றரை ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள அவர், மீதமுள்ள 910 நாட்களை சிறையில் கடக்க வேண்டிய நிலை. ஆனால், இன்னும் ஓரிரு மாதங்களிலேயே சிறையில் இருந்து சசிகலா விடுவிக்கப்படுவார்’’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். மேலும் ‘’சசிகலாவுக்கு மீனம் ராசி, ரேவதி நட்சத்திரம். அவருக்கு அக்டோபர் 4 ம் தேதி குருப்பெயர்ச்சி. 9 ஆவது இடத்துக்கு குரு வருகிறார். இதனால் சசிகலாவுக்குச் சிறப்பான கால நேரம் கூடி வருகிறது. செல்வாக்கு உயரும். பதவி தேடி வரும். அதே வேளையில் எதிரிகளும் ஒதுங்குவர்.

தான் வெற்றியடைவதற்காகச் சிறையில் தனது அறையில் முருகன் படத்தை வைத்து தினந்தோறும் 108 அஷ்டோத்திர மந்திரம் சொல்லி வருகிறார். அந்த நம்பிக்கையில் தற்போது மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். தனது பிறந்த நாளை முன்னிட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு இனிப்போடு கூடிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவுள் அனுக்ரஹத்தில் அவர் வெளியில் வருவார். அதன்பிறகு இன்னும் மூன்று மாதத்திற்குள் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்’’ என்கிறார்கள்.

சிறையில் இருந்து அவர் வெளிவர கிட்டத்தட்ட 30 மாதங்கள் இருக்கையில் இன்னும் மூன்றே மாதத்திற்கு வெளியில் வந்து விடுவார் சசிகலா என நம்பிக் காத்திருக்கிறார்கள் அவரது உறவினர்கள்..!