26 நாளாக காத்திருந்த போலீஸ்…

26 நாளாக காத்திருந்த போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ்.. திருமுருகன் காந்தி கைதும், பின்னணியும்!

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்வதற்காக பல மாநில போலீசார் கடந்த ஒரு மாதமாக தயார் நிலையில் இருந்து உள்ளனர்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அவர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விசாரிக்க இருக்கிறார்கள்.

திருமுருகன் காந்திக்கு சரியாக 28 நாட்களுக்கு முன் லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. செய்திகளில் வெளிப்படையாக வராத இந்த விஷயம், எல்லா மாநில காவல் நிலையத்திற்கு, விமான நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பல முக்கிய காரணங்களுக்காக அவரை கைது செய்ய வேண்டும், இதற்கு அனைத்து மாநில போலீஸும் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் தெரிவித்து இருக்கிறது.

அவரது பாஸ்போர்ட் விவரங்கள் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு சென்று இருக்கிறது. அவர் ஐரோப்பாவில் இருந்ததால், கண்டிப்பாக தென்னிந்தியாவில் ஏதாவது ஒரு விமான நிலையத்திற்கு வர வாய்ப்புள்ளது என்பதால், தென்னிந்திய விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது. அவரை கைது செய்ய மாநில நிர்வாகம் மட்டுமில்லாமல், மத்திய அரசும் முனைப்பு காட்டியுள்ளது. ஐரோப்பாவில், திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசினார். மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு என்று 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன் பேசினார். அந்த பேச்சு பலரை ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது.

இதனால் அவரை உடனடியாக கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த லுக் அவுட் நோட்டீஸ் மூலம் அவர் எந்த விமான நிலையத்தில் இறங்கினாலும் கைது செய்ய சொல்லி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் நிர்வாகம் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருப்பதாகும், சில மத்திய மாநில அரசியல் புள்ளிகள் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரியாக 26 நாள் காத்திருப்பிற்கு பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இவர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டு, சென்னை அழைத்துவரப்பட்ட உள்ளார். அவர் மீது சில முக்கிய வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.