14 ஆண்டுகளுக்கு பின் திருநள்ளாறு கோயிலில் கும்பாபிஷேகம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் இருந்தது போன்று, பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ம் தேதி தொடங்கின. இன்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றன.

இதனையடுத்து ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு வேதமந்திரம் முழங்க இன்று புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் நடைபெறும் போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கும் வகையில் விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.