12 மாணவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு

 

உத்தர பிரதேச மாநிலம், அலிகாரில் உள்ள, ஏ.எம்.யு., எனப்படும், அலிகார் முஸ்லிம் பல்கலையில், மாணவர்களுக்கும், ‘டிவி’ சேனல் குழுவினருக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து, 12 மாணவர்கள் மீது, தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, அலிகார் முஸ்லிம் பல்கலையில், மாணவர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிக்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம்., எனப்படும் அகில இந்திய மஜிலிஸ் – இ – இத்தேஹாதுல் முஸ்லிமீன் அமைப்பு தலைவர், அஸாதுதீன் ஒவைஸிக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

இதையடுத்து, முஸ்லிம் பல்கலைக்கு, தனியார், ‘டிவி’ சேனலைச் சேர்ந்த குழுவினர் சென்றுள்ளனர். அப்போது, மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சிலருக்கும், ‘டிவி’ குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, ஏ.பி.வி.பி., எனப்படும், அகில இந்திய பாரதிய வித்யா பரிஷத் அமைப்பு உறுப்பினர் அளித்த புகாரை விசாரித்த போலீசார், மாணவர் சங்க தலைவர் உட்பட, 12 மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர்.இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

முஸ்லிம் பல்கலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.’முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலிகார் நகரில், இணைய சேவைகள் துண்டிக்கப்படும்’ என, அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.