வைரலாகும் வைரமுத்து

‘கவிப்பேரரசு’ எனக் கூறிக்கொள்ளும் பாடலாசிரியர் வைரமுத்து கடந்த ஆண்டு ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பல பிரச்சினைகளை சந்தித்தார். அது ஓய்ந்திருந்த நிலையில் பாடகி சின்மயி அவர் மீது பாலியல் புகார் கூறி அதிரவைத்தார். இதனால் பல மாதங்கள் வரை வீட்டுக்குள் முடங்கி இருந்த வைரமுத்து தற்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் மீது அடுத்து குற்றச்சாட்டு பரவி வருகிறது.

வாகை சூடவா படத்தில் எழுதிய சர சர சார காத்து வீசும்போது பாடலுக்காக வைரமுத்து பல விருதுகளை வாங்கினார். இந்தப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

தற்போது இந்தப் பாடல் வைரமுத்து எழுதியதல்ல, கார்த்திக் நேதா என்பவர் எழுதிய பாடல் என்ற தகவல் பரவி வருகிறது. இவர் 96 படத்தில் இடம்பெற்ற காதலே காதலே பாடலை எழுதியவர். இதுதவிர 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

இது பற்றி சமூகவலைதளங்களில் 2011ம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சர சர சார காத்து வீசும் போது பாடல் பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் பெற்றுத் தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்.

“இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் எழுத முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சர சர சார காத்து வீசும் போதும், சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன்” என பேசினார்..

இவர் இப்படி சொல்வதை கேட்டு, விருதுகள் பெறுவதை பார்த்து, மெய் சிலிர்த்து சில்லறை சிதற நாம் கை தட்டியிருப்போம், இந்த படத்தின் இன்னொரு பாடலாசிரியர் கார்த்திக் நேதாவிற்கு போறானே ..போறானே பாடலுக்கு மட்டும் இவருக்கான க்ரெடிட் தரப்பட்டது. இப்போது , 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாசிருக்கான விருதை கார்த்திக் நேதா, 96 படத்துக்காக பெற்றிருக்கிறார். அது தொடர்பான பேட்டியில் சர சர சார காத்து பாடலையும் தான் தான் எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து என்றும் கூறியுள்ளார்.

“தம்பி நீங்க எழுதினது தான், ஆனா சார் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி அவர் பேர் போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறும் கார்த்திக், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த திருட்டு தெரியாதா என்ற கேள்விக்கு, தெரியும், ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார். தன் பாடல் திருடப்பட்டதும் இல்லாமல், அது பல விருதுகளை வாங்கி குவிக்கும் போதும், மக்கள் இந்த பாடலை கொண்டாடும் போதும் இந்த கலைஞனின் நிலையை சற்று நினைத்து பாருங்கள், அவர் மனது எப்படி துடித்திருக்கும். அதுவும் முதல் படம், யாரிடம் சொல்ல முடியும். யார் நம்புவார், அந்த இறைவனை தவிர.

திருடப்பட்டாலும் சரி, திறமை வெல்லும், வென்றே ஆக வேண்டும் என்பது தான் காலத்தின் விதி. அதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இப்போது 96ன் காதலே காதலே பாடலை இயதத்துக்கு அருகில் வைத்து கொண்டாடுகிறது தமிழகம். காதலை கரைத்து வார்த்தைகளாக வடிக்கும் இந்த மாயத்தை நிகழ்த்தியவன் யார் என தேடல் நிகழ்கிறது. மக்களின் அன்பு என்பது விருதுகளை கடந்த அங்கீகாரம், சற்று தாமதமாயினும், கார்த்திக் நேதாவிற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

வைரமுத்து அவர்களிடம் ஒரு கோரிக்கை, விக்கிபீடியா உட்பட ஏனைய தளங்களிலும் இந்த பாடலை எழுதியவர் கார்த்திக் என மாற்றப்பட்டுவிட்டது, இயக்குனர் ஒரு சார் கேட்டு நீங்கள் மூணு சார் எழுதிய கதை இப்ப சகல சனத்துக்கும் தெரியும் சார், இதன் பிறகும் இந்த பாடலுக்கான விருதுகளை நீங்கள் வைத்து கொண்டிருப்பது அழகல்ல சார். உங்கள் பாணியில் சொல்வதென்றால், எழுத்தால் இதயங்களை திருடலாம், ஆனால் எழுத்தாளனிடம் திருட கூடாது. நீங்கள் சின்மயிடம் தப்பலாம், உண்மையிடம் தப்ப முடியாது. திருந்துங்கள், விருதுகளை திருப்பி தந்து விடுங்கள்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் நிறைய பேர் பதிவிட்டு வருகின்றனர்.

இது பற்றி, வைரமுத்து இன்னும் வெளிப்படையாக கூறவில்லை. கார்த்திக் நேதா, ஒரு பேட்டியில், நான் எழுதிய டிராக் பாடலை தான், அந்த பெருங்கவிஞர் மேலும், கீழும் மாற்றிப்போட்டு பாடலாக்கிவிட்டார்.

இதுபற்றி இயக்குநர் என்னிடம் சொன்னார். பாடலுக்கான முழு பணத்தையும் அந்த கவிஞருக்கு கொடுத்துவிட்டோம் என்றார். இந்த குற்ற உணர்ச்சி இசையமைப்பாளருக்கும் இருந்தது. அதனால் தான் இன்னொரு பாடலில் எனது பெயரையும் அவரது பெயரையும் சேர்த்து வெளியிட்டார்கள். அந்த கவிஞர் வைரமுத்து, பாடல் சர சர சார காத்து என கூறியிருக்கிறார் கார்த்திக்.

இந்த குற்றச்சாட்டு வைரமுத்து இதுவரை பதில் அளிக்கவில்லை.

விளம்பரத்தின் மீது வைரமுத்துவுக்கு எப்போதுமே கொள்ளைப் பிரியம். அதற்காக அவ்வப்போது சர்ச்சையாகவும் பேசுவார். இந்து மத எதிர்ப்பு கருத்துகளையும் நிறைய கூறுவார்.

தனக்குத் தானே பட்டங்களையும் அவர் கொடுத்துக்கொள்வார். கவிஞர் கண்ணதாசனுக்கு தான் கவியரசு என்ற பட்டம் உள்ளது. கண்ணதாசனை விட தான் பெரிய ஆள் என காட்டிக்கொள்வதற்காக, ”கவிப்பேரரசு” என்ற பட்டத்தை, ஒரு ஜால்ரா கூட்டத்தை விட்டு கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொண்டார்.

விருதுகளையும் பட்டங்களையும் பெற்று இனிமேல் தான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்ற அவசியம் வைரமுத்துவுக்கு இல்லை. கவிஞர் கார்த்திக் நேதா போன்ற இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தினால் அவருக்கு மேலும் பெருமை தான். அதை செய்யாமல், அடுத்தவர் புகழை இவர் அபகரிக்கிறார் என்ற அவப்பெயர் எடுத்துள்ளார்.

வைரமுத்துவிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

நன்றி தினமலர்