வைரமுத்து ஒரு பொய்யர்… சீறிய சின்மயி

பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் சில பெண்கள் கவிஞர் வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ’டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு பேசிய சின்மயி “வைர முத்துவால் எனக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது நான் இதனை உணர்ந்தேன். என்னை அவரது ஹோட்டல் அறைக்கு அழைத்தார். ஆனால் நான் மறுத்து  விட்டேன்.   “

என்னை போன்ற இன்னும் பல பெண் பாடகர்கள் இது குறித்து பேசுவார்கள் என நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தை கண்டு இதனை வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் இதுவே நேரம், அனைவரும் பேச வேண்டும்; ஏனெனில் பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.

சி.என்.என். தொலைகாட்சியில் பேசிய சின்மயி “எந்த விளம்பரத்துக்காவும் இதனை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை, எனக்கு வரும் காலங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. அரசியல் ரீதியாக கூட எனக்குஅழுத்தங்கள் கொடுக்கப்படலாம்” என்றார்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை என்றும், உண்மையைக் காலம் சொல்லும் என்றும் வைரமுத்து அவரது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்துவின் ட்விட்டர் பதிவுக்கு அவர் ஒரு பொய்யர் என பாடகி சின்மயி கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் 2004ம் ஆண்டில் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தரப்பில் இருந்து எனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்தது என்று பாடகி சின்மயியின் தாயார் விமலாவும்  கூறியுள்ளார்.