வீராணம் ஏரி இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டும்…

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி திகழ்கிறது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் ஏரி வறண்டு காணப்பட்டதால் மார்ச் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கல்லணை வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த 27-ந்தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று வீராணம் ஏரிக்கு 920 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று அது 800 கனஅடியாக குறைந்தது. இருப்பினும் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டம் நேற்று 46.40 அடியாக இருந்தது.

இன்று காலை அது 46.80 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது