விலைக்கு போகும் ”அம்மா” ஹெலிகாப்டர்

அதிமுகவினர் கரம் கூப்பியும்,  தரையில் விழுந்தும் கும்பிட்ட ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா சென்னையில் இருந்து அரசு முறை பயணமாக வெளியூர் செல்வதற்காக, 2006ம் ஆண்டு ‘பெல் 412 இ.பி’ என்ற வகையைச் சேர்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ஹெலிகாப்டர் ஒன்று அரசு சார்பில் வாங்கப்பட்டது. இரண்டு இன்ஜின்களைக் கொண்ட இந்த ஹெலிகாப்டரில் 11 பேர் பயணம் செய்ய முடியும்.

ஜெயலலிதா இறந்த பிறகும், கடந்த மார்ச் மாதம் வரை பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஹெலிகாப்டர் தற்போது பழுதடைந்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் இந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது எனவே, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஹெலிகாப்டர் விற்பனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.