விநாயகர் ஊர்வலத்தில் மோதல்… செங்கோட்டையில் போலீஸ் குவிப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை சுற்று வட்டார பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று 38 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இரவு இந்த சிலைகள் அங்குள்ள ஓம் காளி திடலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்த ஊர்வலம் அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட தெரு வழியே செல்ல முயன்றதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி அந்த தெரு வழியே ஊர்வலம் புறப்பட்டது.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியபின்னர் அமைதியாக ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது சிலர் விநாயகர் சிலை மீதும், ஊர்வலத்தில் வந்தவர்கள் மீதும் கல் வீசியதாக கூறப்பட்டது. இதனால் இருதரப்புக்கும்  ஒருவரையொருவர் கற்களாலும், பாட்டில்களாலும் தாக்கிக் கொண்டனர்.  குறைந்த அளவு போலீசாரே சென்றதால் போலீசாரால் மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மோதல் கலவரமாக மாறியது.

அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள், ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது. அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு  மோதலில் ஈடுபட்டவர்கள் தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர் அங்கு தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. மோதல் நடைபெற்ற இடத்தில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.