விடிய விடிய வழக்குகளை விசாரித்த நீதிபதி

மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி ஷாருக், அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தினார்.
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்களுக்கு இன்று (மே., 5 ) முதல் கோடை விடுமுறை துவங்கியது. இதனையடுத்து நேற்று முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மும்பை ஐகோர்ட்டிலும், முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. நீதிபதிகள் விசாரணை முடிந்து மாலை 5 மணிக்கு கிளம்பிய நிலையில், காலை 10 மணிக்கு விசாரணை துவக்கிய நீதிபதி ஷாருக் ஜே. கதவாலா மட்டும், மறுநாள் அதிகாலை 3.30 மணிவரை விசாரணை நடத்தினார்.

அவர் முன் 100க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அவற்றை விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, கோர்ட் அறையில்ஏராளமான வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள், மனுதாரர்கள் கூடியிருந்தனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், நீதிபதி கத்வாலா, அதிகாலை 3.30 மணி வரை வழக்குகளை விசாரித்த போதும், புத்துணர்ச்சியாகவே காணப்பட்டார். எனது வழக்கு கடைசியாக தான் விசாரணைக்கு வந்தது. இருப்பினும், எங்களது தரப்பு வாதத்தையும் பொறுமையாக கேட்டு உத்தரவு பிறப்பித்தார் என்றார்.

முன்னதாக, நீதிபதி கத்வாலா, இரண்டு வாரத்திற்கு முன்னர் தனது சேம்பரில், நள்ளிரவு வரை விசாரணை நடத்தியிருந்தார்.