விகடன் எம்.டி பாலசுப்ரமணியம் காலமான தினமின்று …

?விகடன் எம்.டி பாலசுப்ரமணியம் ??காலமான தினமின்று 😕

அதையொட்டி நடந்த ஒரு நினைவஞ்சலியை மறு பதிப்பு செய்கிறோம்:?

?உச்சிமலையில் ஏறி நின்று, கண்ணுக்கெட்டிய தூரம்வரை கை காட்டி, ‘இதெல்லாம் எங்க சொத்து’ என்று அந்நாளைய ஜமீன்தார்கள் சொல்வார்களாம். ஆனால் சிகரத்தில் நிற்கும் நம் எம்.டி. தனது தோளில் நம்மைத் தூக்கி வைத்து, பத்திரிகை உலகின் கண்ணுக்கெட்டிய தூரம்வரை கை காட்டி ‘இவர் என் சொத்து’ என்று நம்மை உச்சிமோந்து தந்த அங்கீகாரம்…நம் வாழ்நாளின் கௌரவம்!

அந்தப் பாசத்துக்குரிய எம்.டி. பங்குபெற்ற மீட்டிங் அது. டிசம்பர் 27 மாலை. சென்னை பிரஸ் கிளப் உருக்கமான உணர்வலைகளால் தத்தளித்தது. எங்களின் எழுத்துகளை வரிக்கு வரி ரசித்துப் பாராட்டிய அதே எம்.டி.- அவர் குறித்த தீராத அருமைகளைப் பற்றி அவரது தலைமகன்களும், இளைய பிள்ளைகளும், கடைக்குட்டிகளும் கண்ணீரோடு பேசியதை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்…

* விகடனில் பொன்விழா கண்ட ஊழியர், 99 வயதான திரு. ஜெகதீசன்,எம்.டி.யை ’மலர் தூவி வரவேற்றார்’

* பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்ட எம்.டி.யை சிறைக்கு அனுப்ப வைத்த சிரிப்பை சிந்திய படுதலம் சுகுமாரன் பேச்சுதான் ஆரம்பம்.

*’எம்.டி. தயாரித்து, இயக்கிய ‘எல்லோரும் நல்லவரே’ படம் படுதோல்வி. செம நஷ்டம். ஆனால் பைசா பாக்கியில்லாமல் அனைவருக்கும் செட்டில் செய்த எல்லோர்க்கும் நல்லவர்’ என்றார் எஸ்.வி.சேகர்.

* ‘பத்திரிகை உலகில் இப்படியொரு தைரியம் வாய்ந்த ஆசிரியரைக் கண்டதில்லை. ‘உண்மையை எழுதினால் வீட்டுக்கு வந்து அடிப்பாங்களா, வரட்டும் பார்க்கலாம்’ என்று துணிந்து நின்ற அஞ்சாநெஞ்சர்’ – வியந்து போற்றினார், ஜூ.வி.யை வாரமிருமுறை வர வைத்த பிரகாஷ் எம். ஸ்வாமி.

* எக்கச்சக்க நகையோடு தன்னந்தனியே ராத்திரி ரவுண்ட்-அப் போன அனுபவத்தை விவரித்த ’விகடனின் முதல் தைரியத் தாரகை’ சுபா வெங்கட், ‘நான் தனியா போறேன்னு நினைச்சேன், ஆனா எனக்குத் தெரியாமலேயே நாலு நிருபர்களை துணையா அனுப்பிய அவரது அக்கறை…அவர்தான் எம்.டி’ என்று நெகிழ்ந்தார்.

* ’எம்.டி. எடிட் பண்ற அழகே தனி. கொஞ்சம் வெட்டி, ஒரே ஒரு வார்த்தைதான் சேர்ப்பார், அது அந்தக் கட்டுரையையே கம்பீரமாக்கிரும்’ – சிலாகித்தார் பா. கிருஷ்ணன்.

* ’ஒரு கட்டுரை வந்தா முதல்ல நான் எழுதியது யாருன்னு பார்ப்பேன். அதைப் பார்த்த எம்.டி. ‘எப்பவுமே கட்டுரையை எழுதியவரின் பெயரைப் பார்க்காதே. வேண்டியவர், வேண்டாதவர் என்ற எண்ணம் வந்துவிடலாம். என்ன எழுதியிருக்கிறார் என்று மட்டும் பார்’ என்றார். நான் வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தபோது அதைத்தான் கடைபிடித்தேன்” – கற்றுக்கொண்டதை கள்ளம் கபடமின்றிப் பகிர்ந்தார், எம்.டி.யையே கைதட்டி ரசிக்க வைக்கும் அலாதியான கலாரசிகர் சுதாங்கன்.

* ’நாங்கள்லாம் எம்.டி.யிடம் மாற்றுக் கருத்து சொல்லவே பயப்படுவோம். ஆனா ஆந்தை குமார் மட்டும் அவரோடு வாதமே நடத்துவார். அந்த அளவிற்கு சுதந்திரம் தந்தவர், மாற்றுக் கருத்துகளை மதித்தவர்’ என்று நெகிழ்ந்தார், ஆ.வி.யில் மாணவ நிருபராகச் சேர்ந்து ஆசிரியராக உயர்ந்த கே. அசோகன்.

* மாணவ நிருபராக ஆவதற்குள்ளேயே எம்.டி.யை தனது கடிதத்தால் அசத்தி, தனக்கென எழுத்துத் தேர்வையே வேறு தேதிக்கு மாற்ற வைத்த ’பேனா போராளி’ அண்ணன் சு. செந்தில்குமரன், ”நான் எழுதிய ஒரு கதையின் க்ளைமாக்ஸை மனப்பாடமாகச் சொல்லி, தன் உயரத்துக்கு என்னை உயர்த்தி அழகு பார்த்த என் தெய்வம் எம்.டி.’ என்று உருகினார்.

* ’என்னிடம் ஒரு விவசாயக் கட்டுரையைப் படிக்கச் சொன்னார் எம்.டி. ’புரியுதா’ என்றார். ’புரியுது சார்’ என்றேன். ‘சிட்டியில இருக்கிற உங்களுக்கே புரிஞ்சுருச்சின்னா, அந்த கிராமத்து விவசாயிக்கும் புரிஞ்சுரும்’ என்றார். யாரோ ஒரு விவசாயி கேட்ட சந்தேகத்துக்கு எம்.டி. எழுதின பதில் அது. யாராக இருந்தாலும் மதிச்சு பதில் எழுதுவார்’ – ஆச்சரியப்படுத்தினார் அண்ணன் மேப்ஸ்.

* ‘காற்று வளையம் என்று நான் வைத்த தலைப்புக்காக மணிக்கணக்கில் என்னுடன் விவாதித்து, அதில் உள்ள அர்த்தத்தை விளக்கிச் சொன்னபிறகே ஓகே சொன்னார்’ என்றார் பாஸ்கர் சக்தி.

* ‘படப்பை பண்ணையைப் பார்க்க வந்திருந்தார்கள் என் பெற்றோர். அன்று தான் வரமுடியாவிட்டாலும், அங்கு உபசரிக்க வைத்து, அடிக்கடி ஃபோன் செய்து விசாரித்த அந்தப் பாசத்தை மறக்க முடியுமா?’ – கலங்கினார் முருகேஷ் பாபு.

* ’விகடனுக்காக கூவத்தில் கணவன் – மனைவி படகு சவாரி. மனைவி வேஷத்தில் நான். ’கணவர்’ நடுத்தர உடல்வாகு. நானோ செம ஒல்லி. என்னைப் பார்த்ததும் எம்.டி. ‘படகுக்கு சேதமில்லை’ என்று சொல்ல…ஒரே சிரிப்பு. காரணம் – அந்தப் படகு எம்.டி.க்கு சொந்தம்” – கலகலக்க வைத்தார் ரமேஷ் வைத்யா.

* ‘வாழ்நாள் நெடுக மறக்க முடியாத அடையாளத்தைத் தந்தவர் நம் எம்.டி.’ என்று வணங்கினார், தேனமிர்த சியாமளா.

* ’வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவனை அவனது வீட்டில் சேர்த்தது பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். படித்து முடித்த எம்.டி. என்னை வீட்டுக்குப் போய், பெற்றோரைப் பார்த்துவரச் சொல்லி பணமும் லீவும் தந்து அனுப்பினார். படித்த கட்டுரைக்குள்ளேயே, எழுதியவனின் மனசையும் படித்த தாயுமானவர்’ – தழுதழுத்தார் எம்.பி. உதயசூரியன்.

* ‘எனக்கு அடையாளம் தந்தது விகடன்தான். அந்த நன்றிக்கடனாக, விகடனிலிருந்த ஒரு ஃபோட்டோகிராபர் இன்று என்னிடம் அசிஸ்டண்ட் கேமராமேனாக இருக்கிறார்’ – ஃப்ளாஷ் அடிக்க வைத்தார் ’பிசாசு’ ஒளிப்பதிவாளர் அண்ணன் ரவி ராய்.

* ‘எம்.ஜி.ஆர்.தான் எப்பவுமே சண்டை போட்டு ஜெயிப்பாரு, அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர்.கிட்டயே சண்டை போட்டு ஜெயிச்சவர் எம்.டி.’ என்று கைதட்டல் பெற்றார் நடிகர் பார்த்திபன்.

* ‘என்றும் என்றென்றும் ஏழேழு தலைமுறைக்கும் என் பேரன் சாப்பிடும் பருக்கையிலும் உன் பேரே எழுதியிருக்கும்’’ – கவிதையில் உருகினார் ஜி. கௌதம்.

* ‘எம்.டி. பரிசாகக் கொடுத்த ஆயிரம் ரூபாய், இதோ என் கையில் மோதிரமாக ஜொலிக்கிறது. என்னை வாழ வைத்த தெய்வம் எம்.டி.’ என்று கண்கசிந்தார் ராஜேஷ்கண்ணா.

* ‘என் சிஸ்டத்தின் டெஸ்க் டாப் படமே எம்.டி. அவர்களுடையதுதான். அவரது ஆசிகளோடுதான் என் ஒவ்வொரு நாளும் தொடங்குகிறது’ என்று சிலிர்க்க வைத்தார், சுற்றிச் சுழன்று ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் காமிராவில் சுற்றிக்கொண்ட அண்ணன் கோ. சிவபெருமாள்.

* ‘எம்.டி.கிட்ட ஜாய்னிங் லெட்டர் ஒரு தடவைதான் வாங்கினேன். ஆனா டெர்மினேஷன் லெட்டர் ஆறு தடவை வாங்கினேன். திரும்பத் திரும்ப அவர் வாசலுக்கு வருவேன், மன்னிச்சு ஏத்துக்குவாரு’ – மனம் நெகிழ்ந்து பேசினார், ராத்திரி ரவுண்ட்-அப்பில் சரித்திரம் படைத்த அண்ணன் ஆந்தை குமார்.

* ‘நான் ஒரு கட்டுரை எழுதினதுக்காக, எம்.டி.யையும் சேர்த்து கோர்ட்டில் நிக்க வெச்சுட்டேன். பின்னால நின்னு பாத்தா, அவர் காதுகள் ரத்தச் சிவப்புல இருக்கு. இப்பேர்ப்பட்ட எம்.டி.யை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டமேனு ரொம்ப ஃபீல் பண்ணேன்’ – இன்னமும் மருகுகிறார் அண்ணன் டி. அருள்செழியன்.

* ‘எம்.டி. ஒரு பெரிய சகாப்தம். அரசியல், இலக்கியம்னு எல்லாத் துறைகளிலும் அவ்வளவு அப்டேட்டா வேற யாரும் இருக்கவே முடியாது’ என்று பூரித்தார் ம. செந்தில்குமார்.

* பேச வந்த அண்ணன் பொன்ஸீ ‘விட்டுருங்க, நான் அழுதுருவேன்’ என்று தழுதழுத்தது..அனைவரையும் நொடியில் கலங்க வைத்தது. ஆம், எம்.டி.யின் செல்லப்பிள்ளையாக கடைசிவரை அவருடனிருந்த பொன்ஸீயின் துயரத்தை யார் தணிக்க முடியும்? சில வார்த்தைகள் பேசிய பொன். காசிராஜனும் ஒருகட்டத்தில் ‘என்னால பேச முடியலை’ என்று கண்கலங்கிவிட்டார்.

* வரவேற்று, நன்றி கூறிய சென்னை ப்ரஸ் கிளப் இணை செயலாளர் பாரதி தமிழன் ‘அந்த மகத்தான மனிதர் எல்லா பத்திரிகைகளுக்கும் பொதுவானவர். அவருக்கு இங்கே விழா எடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன்’’ என்றார் காந்தக் குரலில்.

* ‘ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா…
”நூறுகால்” மண்டபம்போல் நாங்கள் கொண்ட சொந்தமடா” என்று மனசுக்குள் பாடியபடி, நெகிழ்ச்சிக் கண்ணீரோடு எம்.டி.யை வணங்கி விடைபெற்றோம்!

– ®✍?எம்.பி. உதயசூரியன்