வாழ்க சொல்லக் கூடிய கூட்டம் வாலாட்ட முடியாது…வைகோ

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது. பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சென்னை விமான நிலையம் வந்த பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகளோ, மக்களோ கருப்புக் கொடி காட்டவில்லை என்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாத வைகோ கருப்புக் கொடி காட்டினார் என்றும் கூறினார்.

மேலும், வைகோவிற்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கூறிய பாஜக தொண்டர்களிடம் தான் வேண்டாம் என்று சொன்னதாகவும் தமிழிசை கூறினார். அதனைத் தொடர்ந்து பேசியவர் வைகோவின் வெற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் கூறினார்.

இதையடுத்து, வைகோ சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் தமிழிசை சவுந்திரராஜனின் அறிவுறுத்தலையும் மீறி பாரத் மாதா கீ ஜே என ஆவேசமாக முழக்கமிட்டனர்.

அங்கு வந்த காவல்துறையினர் பாஜக தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ’தமிழகத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் மோடி என்றும் தமிழகத்தை வஞ்சித்தவர் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழக மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக் கொடி காட்டினோம் என்று கூறிய வைகோ, தன்னை தமிழக மக்கள் பாதுகாப்பார்கள் என்றும் கோட்சே வாழ்க என்று சொல்லக் கூடிய கூட்டம் தமிழகத்தில் வாலாட்ட முடியாது என்றும் வைகோ கூறினார்.