வழக்கறிஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி, முறப்பநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் வேல் முருகன் (27). வழக்கறிஞராக உள்ளார். இவருக்கும், இவரது உறவினர் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சண்முகவேல் மகன் செல்வம் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.

இன்று காலை சுமார் 9.30 மணியளவில் செல்வம், வேல் முருகனிடம் நிலப்பிரச்சனை தொடர்பாக தகராறு செய்ததாகவும் தகராறு முற்றவே கோபமான செல்வம், வேல் முருகனை அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் முறப்பநாடு போலீசார் சம்பவ இடம் சென்று வேல் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை., அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.