வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சி – மார்ச் 13ம் தேதி நெல்லையின் எழுச்சி நாளாகும்.

♥தெக்கத்தி சீமை என்ற பெருமை நெல்லைக்கு உண்டு. வரலாற்று அடிப்படையில் திருநெல்வேலி பெருமை பெற்ற ஊராக இருந்தாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நெல்லைச் சீமையின் பங்கு அளப்பறியது. நெல்லையை மையமாகக் கொண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள் வரலாற்று பக்கங்களில் இடம்பெற்று, இன்றுவரை பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதில், நெல்லையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுவது மார்ச் 13ம் தேதி கடை பிடிக்கப்படும் நெல்லையின் எழுச்சி நாளாகும்.

சுதந்திரப் போராட்ட வீரர் விபின்சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் நெல்லையில், தூத்துக்குடியிலும் வ.உ.சிதம்பரனார் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்துக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்தது. 1908ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி நெல்லை தாமிரபரணி ஆற்றின் தைப்பூச மண்டபத்தில் 13 ஆயிரம் மக்கள் திரண்ட கூட்டத்தில் வ.உ.சிதம்பரனாரும், சுப்பிரமணிய சிவாவும் எழுச்சியுரை ஆற்றினர். தடையை மீறி பேசியதற்காக வ.உ.சி, சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய 3 பேரையும் மார்ச் 12ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்தது. இவர்கள் கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் 13ம் தேதி நெல்லையில் கலவரம் வெடித்தது. நெல்லை மதிதா இந்துக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்.

நெல்லை நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகம், போலீஸ் நிலையத்துக்குத் தீ வைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடும் நடந்தது. உதவி கலெக்டர் ஆஷ் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவனும், போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரும் இறந்தனர். தச்சநல்லூர் வரை இந்தக் கலவரம்பரவியது. பிரிட்டிஷாரை மக்கள் கல் வீசி தாக்கினர். இதற்காக தூத்துக்குடியிலும் மிகப் பெரியவேலை நிறுத்தம் நடந்தது. இதில் குதிரை வண்டிகாரர்கள் பலர் கலந்து கொண்டனர். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்காக அப்போது இந்தியாவில் நடந்த முதல் வேலை நிறுத்தம் இதுவாகும். இந்த விஷயம் பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த நிகழ்வு திருநெல்வேலி கலகம் என்று பிரிட்டிஷாரால் பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 13ம் தேதி திருநெல்வேலி கலகத்தின் அடிப்படையில் தான் வஉசி, சிவா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நூற்றுக்கும் அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஸ்ரீநிவாச்சாரி, சடகோபாச்சாரி, நரசிம்மாச்சாரி உட்பட பல வக்கில்கள் வஉசி, சிவாவுக்கு ஆதரவாக வாதாடினர். நீதிபதி பின்ஹே வஉசிக்கு 40 ஆண்டுகளும், சிவாவிற்கு 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதித்தார். தீர்ப்பைக் கேட்ட வஉசி சகோதரர், ”எனது தம்பிக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையா?” என்று கோர்ட் வளாகத்திலேயே அழுது புலம்பினார். இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் இருந்த நேரத்தில், நாட்டின் தென்கோடியில் நடந்த இந்த எழுச்சி, சுதந்திரப் போராட்டத்திற்கு முழு உத்வேகம் அளிச்சுதாக்கும்🔥