வங்கி கணக்கில் ரூ. 15 லட்சம் செலுத்துவேன் என்றார், 10 ரூபாயை கூட செலுத்தவில்லை மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். சிக்கமகளூருவில் ‘‘மக்களின் ஆசீர்வாதம்’’ என்ற பெயரில் நடந்த காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவும் சேர்ந்து நாட்டை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. நாட்டில் மக்கள் பிளவு பட்டு இருக்கிறார்கள். இந்த பிளவை நீக்கி மக்களை ஒன்று சேர்க்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் மக்களை ஒன்று சேர்ப்பேன்.

என்னை பிரதமர் ஆக்கினால் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று நரேந்திர மோடி கூறினார். ஆனால் இதுவரையில் அவர் யாருடைய வங்கி கணக்கிலும் 10 ரூபாயை கூட செலுத்தவில்லை. இந்த 4 வருடத்தில் நாடு எந்த ஒரு வளர்ச்சியையும் அடையவில்லை. வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது. நான் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவேன் என்று நரேந்திர மோடி உறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தபிறகு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா?.

இதுவரையில் அவர் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு நான் நேரடியாக சென்று நரேந்திர மோடியை சந்தித்தேன். அப்போது கர்நாடகத்தில் உள்ள தேசிய வங்கிகளில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி அவரிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் என்னுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. உடனே நான், முதல்–மந்திரி சித்தராமையாவை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார் என்று தெரிவித்தேன்.

மேலும் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய உங்களால் எதுவும் செய்ய முடியுமா? என்று கேட்டேன். உடனே முதல்–மந்திரி சித்தராமையா கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரையில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர். பிரதமர் மனது வைத்திருந்தால் விவசாயக்கடனை கண்டிப்பாக தள்ளுபடி செய்திருக்க முடியும். ஏழைகளின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. அதேபோல் இந்தியாவில் ஆரோக்கியம், கல்வி, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.