ரூ.7,304 கோடி நஷ்டத்தில் போக்குவரத்துத் துறை இயங்கி வருகிறது

தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தை சமாளிக்க, பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், நீண்ட தூர பேருந்து சேவைக்கான அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்படுகின்றன.

தமிழக அரசின் இந்த போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் தினமும் இரண்டு கோடி பேர் பேருந்து சேவையை பயன்படுத்துகிறார்கள். ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவியாய் இருப்பதால், போக்குவரத்து துறை பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் பேருந்து கட்டணம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பேருந்து கட்டணம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவை விட 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை சந்தித்ததன் காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அப்போது முன்னாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா பேருந்து கட்டணத்தை உயர்த்தினார்.

இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. பேருந்து கட்டணத்தை உயர்த்தியும் போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க முடியாமல் தமிழக அரசு திணறி வந்தது. இதுவரை தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் வாங்கிய கடன் தொகை 2400 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

தற்போது மொத்தமாக ரூ.7,304 கோடி நஷ்டத்தில் அரசு போக்குவரத்துத் துறை இயங்கி வருகிறது என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2,109 கோடி கூடுதல் நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.