ராமசாமி படையாட்சி நினைவு மண்டபத்திற்கு முதல்வர் அடிக்கல்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ராமசாமி படையாட்சியார் பிறந்த நாளான செப்டம்பர் 16 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ராமசாமி படையாட்சியாருக்கு, அவரது முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 19ம் தேதி முதலமைச்சர் அறிவித்தார்.

இதற்காக கடலூர் மாவட்டம் மஞ்சங்குப்பம் அருகே 1 ஏக்கர் 70 செண்ட் நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து முன்னர் அறிவித்தபடி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, காணொலிக் காட்சி மூலம் நினைவு மண்டபத்திற்கான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். அத்துடன், நினைவு மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.சி.சம்பத், சி.சண்முகம், அன்பழகன், துரைக்கண்ணன், கே.சி.வீரமணி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தங்களுக்கு முறையான அழைப்பு இல்லை என்று கூறி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 எம்பிக்கள் மற்றும் மூன்று எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.