ரஜினியை விட ராஜமவுலிக்கு அதிக விலை

தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக தொகை கொடுத்து சாட்டிலைட் உரிமை வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படம் பெற்றது.

அந்தப் படத்தை ஜீ டிவி நிறுவனம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை 110 கோடி கொடுத்து வாங்கியது. அந்த வியாபாரம் தென்னிந்திய உலகையே ஆச்சரியப்பட வைத்தது.

இப்போது அதையும் மீறும் வகையில் ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைக்காக 150 கோடி ரூபாயைத் தர ஜீ டிவி நிறுவனம் தயாராக உள்ளதாம்.

ஆனால், படத் தயாரிப்பு நிறுவனம் 200 கோடி ரூபாய் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாம். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் இருவருக்கும் பொதுவான ஒரு விலையில் இந்த உரிமை முடிவு செய்யப்படும் என்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘2.0’ படத்தை விடவும் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவரும் படத்திற்கு இவ்வளவு விலையா என தெலுங்குத் திரையுலகமும் ஆச்சரியத்தில் உள்ளதாம்.