ரஃபேல் விமான ஊழல் தவறான முன் உதாரணம் … தங்கபாலு

ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தனியாருக்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கியதை கண்டித்து சேலத்திலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான தங்கபாலு தலைமையில் நடைபெற்ற இந்தப்பேரணியில் அக்கட்சியை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்ட இந்த கண்டனப் பேரணி சின்னக்கடைவீதி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  கே.வீ.தங்கபாலு ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் கட்சிப் பாகுபாடின்றி குடியரசுத் தலைவர் விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என்றும், பாதுகாப்பு துறையில் நடந்த இந்த ஊழல் ஒரு தவறான முன்னுதாரணம்  என்றும் கூறினார்.