முதல்வர் மீதான புகார்- சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சுமார் 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் உறவினர் நிறுவனங்களுக்கே சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி சட்ட விரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார்.

ஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் கோரியிருந்தது

இந்நிலையில் முதலமைச்சர் மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த விவகார புகார் குறித்து விசாரிக்க திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முதல்வர் பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்று கூறிய நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கின் ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 3 மாதத்தில் ஆரம்ப கட்ட விசாரணையை முடித்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் , ஆரம்ப கட்ட விசாரணையின் முடிவில் புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது