முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்

முதல்வர் பழனிசாமி நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்தது. இந்த நிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார் அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவர் அளிக்க உள்ளார். தமிழகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமருடன் அவர் விவாதிக்க உள்ளார்.

மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முடிந்துமாலையே அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமராக 2-வது முறையாக மோடி பதவியேற்ற போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது மீண்டும் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.