மினி வேன் கவிழ்ந்து விபத்து – 2பேர் காயம்

மதுரை விராட்டிப்பத்து முல்லை நகரைச்; சேர்ந்த நீலமேகன் மகன் மாயக்கண்ணன்(30). மினிவேன் டிரைவராக இவர் இன்று காலையில் நாகர்கோவில் அருகேயுள்ள குளச்சல் துறைமுகத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தார்.

வேன், திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் அருகே வந்த போது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் நிலைகுலைந்து தடுப்புச்சுவரில் ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் வேனின் ஒருபக்க கதவு உடைப்பு ஏற்பட்டு வேனில் மீன்களுடன் இருந்த பெட்டிகள் சாலையில் சிதறின.

இதில் வேன் ஓட்டுநர் மாயக்கண்ணன் மற்றும் வேனில் பயணம் செய்த கிளீனர் மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பெரியசாமி நகரைச் சேர்ந்த அருண் ஆகிய இருவரும் காயமடைந்தனர். மேலும் 1லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்கள் சேதமடைந்து வீணாகி போனது.

தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.