மாற்று தேதியில் தேர்தல்… பிஷப் கவுன்சில் கோரிக்கை

தமிழகத்தில், ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மதுரையில், ‘சித்திரைத் திருவிழாவுக்காக லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள் என்பதால், அந்தச் சமயத்தில் வாக்குப்பதிவு நடத்தினால் சிரமம் ஏற்படும்’ என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டு தோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி அமைந்துள்ளதால் திருவண்ணாமலை தொகுதியிலும் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் வழிபாடு நடைபெற இருப்பதால், அந்த வழிபாட்டுக்கும் இடையூறாக இருக்கும் என்பதால், தேர்தல் தேதியை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவரும், மதுரை உயர் மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ஏப்ரல் 18-ம் தேதி புனித வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில், வாக்குப்பதிவை வைத்திருப்பது கிறிஸ்துவர்களுக்கு உகந்ததாக இல்லை மேலும் தேர்தலில் ஈடுபடும் கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் அன்றைய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்படும். அதனால், கிறிஸ்துவ மக்களின் கோரிக்கையை ஏற்று, மாற்று தேதியில் தேர்தலை நடத்த ஆணையிட ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.