மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 21.06.2018 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து யோகா ஆசன செய்முறை பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. இவ்விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் முனைவர் S. சந்தோஷ் பாபு அவர்கள் தலைமை உரையாற்றி துவக்கிவைத்து பேசுகையில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல்நலம், மனநலம் மேலும் நோய் நொடியில்லா ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முக்கிய பங்கு வகிக்கிறது என பேசி மேலும் யோகா ஆசன பயிற்சியினை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் D. விஜயகுமார் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் உலக சமுதாய சேவா சங்கத்தின் திருநெல்வேலி மண்டலத் தலைவர் A. அண்ணாமலையார் அவர்கள் கலந்து கொண்டு யோகாவின் வரலாறுகள், யோகாவின் நோய் தீர்க்கும் பயன்கள் பற்றியும் எடுத்துச் சொல்லியும் யோகா செய்வதன் மூலம் மன இறுக்கம் குறைந்து ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும் என்று எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் முன்னதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு இயக்குநர் மற்றும் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ச.சேது வரவேற்புரையாற்றி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இவ்விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தேர்வாணையர், பேராசியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி, அலுவலர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்க்குட்பட்ட உறுப்புக் கல்லூரிகளான ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, தூய யோவான் கல்லூரி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வின் முடிவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர்கள் நலத்துறை இயக்குநர் முனைவர் A.வெள்ளியப்பன் நன்றி கூறினார்.