பா.ஜனதாவுடன் கூட்டணி வேண்டாம் …அதிமுக

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்குமா? அல்லது அ.தி.மு.க. தனித்து களம் இறங்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிதான் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தான் அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும். தமிழகத்தை வஞ்சிக்கும் கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி சேர மாட்டோம் என்று வெளிப்படையாகவே கூறினார். ஆனால் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் கூறுகையில், கூட்டணி வி‌ஷயத்தில் ஜெயலலிதா பாதையில் (தனித்துப் போட்டி) செல்வோம். பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்று அ.தி.மு.க.வில் யாரும் சொல்லவில்லை என்று கூறி உள்ளனர்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது பெரும்பாலான அமைச்சர்கள், பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் சொல்லி தான் நாம் ஓட்டு கேட்க முடியும். இதற்கு ஜெயலலிதா பாணியில் கடந்த தேர்தல் போல் தனித்து போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனராம்

மேலும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் நமக்கு கிடைக்கும் ஓட்டும் கிடைக்காமல் போய் விடும். பா.ஜனதா எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அதை அரசியல் ரீதியாக சமாளித்துக் கொள்ளலாம். மற்ற கட்சிகள் பா.ஜனதா என்றால் மதவாத கட்சி என்று விமர்சனம் செய்வார்கள். இதை எதிர் கொண்டு தான் மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும்.எனவே தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமையும் போது அ.தி.மு.க. ஆதரவு தரும் என்ற வகையில் உறுதி கொடுக்கலாம்.

பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பா.ஜனதாவுக்கு கொடுப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும் கூறிய ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உன்னிப்பாக கேட்டார்கள்.