பகல் கொள்ளை ….ஆயருக்கு கிறித்தவ இளைஞர்கள் வேண்டுகோள்

நாகை மாவட்ட வேளாங்கண்ணி பேராலயத்தை நிர்வகிக்கின்ற தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பேராலய குருக்களே , உங்களின் சிந்தனைக்கு.

உலகப் புகழ் பெற்ற அனைத்து மதத்தினராலும் வணங்கப்படுகிற, போற்றப்படுகிற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் ஆண்டுத் திருவிழாவிற்கு எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து “அன்னையின் கொடி ஏற்றப்படுகிற முதல் நாளிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கி கடைசி திருவிழாவை முடித்துவிட்டுத்தான் செல்வார்கள்” . ஆனால் இன்றைய நிலை என்ன?

திருப்பதி போன்ற மற்ற மதத்தினரால் வழிபடப்படுகிற ஆலயங்களில் வருகின்ற பக்தர்களுக்கு 3 வேளையும் இலவசமாக தரமான உணவு வழங்கப்படுகிறது.

கோடி கோடியாய் கொட்டி பேராலயத்தை திணறச் செய்கிற பக்தர்களுக்கு உங்கள் நிர்வாகம் செய்கிற சேவை என்ன?

உங்கள் நிர்வாகத்தின் இப்பேற்பட்ட நிலையை அறிந்த வேளை நகர சாமானியர்கள் என்ன செய்கிறார்கள்?.

தஞ்சை ஆயரே! நீங்கள் மறை மாவட்ட ஆயராக பொறுப்பேற்ற பின் வேளை திருத்தலத்தில் ஆன்மீக செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வியாபாரக் கண்ணோட்டத்தோடு செயல்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறதே தெரியுமா?

உங்களுக்கு ஜால்ரா போடுபவர்களை மட்டுமே நீங்கள் வேளாங்கண்ணியில் பொறுப்பில் போடுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுவது தெரியுமா?

வேளாங்கண்ணியில் பொறுப்பில் உள்ள குருக்கள் கணக்கில் உங்களிடம் சிறிய தொகையை காட்டி விட்டு பெரிய தொகையை அவர்கள் சுருட்டி விடுவதாக ஒரு கருத்து நிலவுகிறது தெரியுமா?

ஒரு சில எடுத்துக் காட்டுக்கள் –

வேளை பேராலய நிர்வாகத்தால் நிர்வகிக்கக் கூடிய உணவகங்களில் தரமற்ற உணவுகளை அநியாய விலைக்கு விற்கப்படுகிறது.

வேளை பேராலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பணிகளுக்காக வந்திருக்கின்ற காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்காவல் படை, வருவாய் துறை, சுகாதாரத் துறை, மற்றும் குருக்கள் ஆகியோருக்கு சமைக்கப்படுகின்ற உணவு வீணாகிப் போனால் அதை கீழே கொட்டாமல் பேராலய உணவங்களில் கொண்டு வந்து விற்கிறார், அந்தப் பொறுப்பை ஏற்றுள்ள குருவானவர்.

வருகிறவர்களுக்கு நீங்கள் உணவை இலவசமாகக் கொடுத்தால் தனியார் உணவகங்கள் மிகக் குறைவான விலைக்கு கொடுப்பார்கள் . ஆனால் நீங்களே தரமற்ற குறைவான உணவை அதிக விலைக்குக் கொடுப்பதனால் தனியார் உணவகங்கள் மிக அதிகமான விலைக்கு கொடுக்கிறார்கள்.

பேராலய விடுதி அறைகளின் தின வாடகை முறையே 800, 1000 , 1500 , 2000 என அதிகமாக இருப்பதால் தனியார் விடுதிகள் 3000 , 4000 , 5000, 6000 என அநியாய விலை வாங்குகிறார்கள்.

அதன் காரணமாக வேளாங்கண்ணியில் அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது.

இந்த அநியாய பகல் கொள்ளைக்கு பயந்து பக்தர்கள் அன்னையின் மேல் கொண்ட பக்தியால் ஒரே ஒரு நாள் வந்து வேண்டுதல் முடித்து சென்று விடுகிறார்கள்.

எனவே ஆயரே, குருக்களே! உங்களுக்கு ஆரோக்கிய அன்னையின் மீது பக்தியும் , விசுவாசமும், மறுமையின் மீது நம்பிக்கையும் , இயேசுவின் வார்த்தையான ” என் தந்தையின் கூடாரத்தை வியாபார தலமாக ஆக்காதீர்கள்” என்பதில் விசுவாசமிருந்தால் உடனடியாக சிந்தித்து மக்களுக்கு பலனளிக்கும் முடிவெடுங்கள்.

இவண்,
கிறித்தவ இளைஞர் மேம்பாட்டு இயக்கம்