நெல்லையில் கம்யு. நிர்வாகி படுகொலை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளரான அசோக் என்பவரை சாதி வெறியர்கள் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் அருகேயுள்ள கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் அசோக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும், அப்பகுதியில் நிலவும் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக அவர் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது வாகனத்தில் இருந்த புல் கட்டின் முனை அப்பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதிக்காரரின் மீது பட்டுவிட்டது. இது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் அசோக் புகார் செய்திருக்கிறார்.

இதனால் அசோக் மீது வன்மத்தில் இருந்த சில சாதி வெறியர்கள் திட்டமிட்டு கரையிருப்பு அருகே அசோக்கை வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள். இந்த படுகொலைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கரையிருப்பு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர் அசோக்கை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றேன். மேலும், உயிரிழந்த அசோக்கின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

சமீபகாலமாக தென் மாவட்டங்களில் இதுபோன்ற சாதிவெறிப் படுகொலைகளும், தாக்குதல்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த அபாய போக்கை தடுத்து நிறுத்தவும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் தமிழக அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.