நாளை திருவண்ணாமலை கிரிவலம் போறீகளா?

மங்களகரமான இந்த தை மாச பௌர்ணமி நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் 1.17 மணிக்குத் தொடங்கி, திங்கள் கிழமை (ஜனவரி 21) காலை 11.08 மணிக்கு முடிவடைகிறது. எனவே, பௌர்ணமி திதி இருக்கும் இந்த குறிப்பிட்ட காலம், கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமாகும். மேலும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (20, 21.1.19) ஆகிய இரண்டு தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரையிலிருந்து நாளை (ஜனவரி 20) மாலை 6 மணிக்கு மின்சாரரயில் புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு வேலூரைச் சென்றடையும். அதற்குப் பிறகு, சிறப்பு ரயிலாக இந்த மின்சார ரயில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து புறப்பட்டுச் சென்று, இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை அடையும். திங்கள்கிழமை (ஜனவரி 21 ) அதிகாலை 4 மணிக்கு இந்த சிறப்பு ரயில் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 6 மணியளவில் வேலூர் கன்டோன்மென்டை அடையும். பிறகு அங்கிருந்து புறப்படும் இந்த ரயில், சென்னை கடற்கரையைக் காலை 9.30 மணிக்கு வந்தடையும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.