நந்தினிக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நந்தினி மற்றும் அவரது தந்தையை நீதிபதி ஜாமினில் விடுவித்தார். கடந்த 2014ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 27ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? என நீதிபதியிடம் வாதாடினார். இதனால் அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவருக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்ததும், ஆனால் அவரும், அவரது தந்தையும் சிறையிலிருந்ததால் திருமணம் நின்று போனதும், ஜூலை 9ம் தேதி வரை அவர்களை சிறையிலடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் குறித்து எத்தனை பேர் தரக்குறைவாக பேசிவிட்டு வெளியே இருக்கும் நிலையில் நந்தினியையும் அவரது தந்தை ஆனந்தனையும் மட்டும் கைது செய்தது ஏன் என கட்சித் தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பிய நிலையில் தனது சகோதரியையும், தந்தையையும் விடுவிக்கக் கோரி நந்தினியின் தங்கையும், மதுரை சட்டக் கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா கல்லூரி முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது அவரது வீட்டிற்கு சென்ற மதுரை புதூர் போலீசார், நிரஞ்சனாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரும் ஜாமின் கோரியிருந்த நிலையில், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது இருவருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.