நடிகர் சித்தூர் வி. நாகையா பிறந்த தினம் இன்று…

பத்திரிகையாளர், நாடக மற்றும் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டு தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தாலும் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடி தனது 69வது வயதில் காலமான சித்தூர் வி. நாகையாவின் 113வது பிறந்த தினம் இன்று (28-03-2017).
 
இந்தத் தலைமுறையினருக்கு சித்தூர் வி. நாகையாவைப் பற்றி தெரியுமா என்பது கேள்விக்குறியே. எல்லாப் பிரபலங்களையும் ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது இயலாத ஒன்று. ஆனால், சினிமாவை நேசிப்பவர்கள் இவரைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.
நாகையாவின் இளமைப் பருவத்தைத் திரும்பிப் பார்த்தோமென்றால், 1904ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 28ஆம் நாள் தெலுங்குப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் ராமலிங்க சர்மா தாயார் பெயர் லக்‌ஷ்மாம்பா.
அவருடைய குடும்பம் ஆந்திராவிலுள்ள குப்பம் என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தது, பின்பு, திருப்பதியில் குடியேறியது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய கல்வி உதவித் தொகையில் பட்டப்படிப்பு முடித்தார்.
அப்போதைய ஆந்திர அரசாங்கத்தின் அலுவலகத்தில் சிறிதுகாலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார், பின்பு, ஆந்திரப் பத்திரிகை ஒன்றில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார்.
 
தென்னிந்தியாவில் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களான சத்தியமூர்த்தி மற்றும் எஸ். சீனிவாச அய்யங்கார் போன்றோரின் சுதந்தர வேட்கையால் ஈர்க்கப்பட்டு 1925ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு தேசபக்திப் பாடல்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாடினார். இதற்கிடையே பல சிறந்த தேசத் தலைவர்கள் கூடியிருந்த மாநாட்டுப் பந்தலில் அழகிய ஆடை அணிந்த சிறுமி எல்லோரிடமும் இனிமையாக ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார். நாகையா பாடி முடித்ததும், அந்தச் சிறுமி நாகையா அருகே வந்து, இப்போது பாடிய பாடல்களை எந்த மொழிகளில் பாடினீர்கள் என்று கேட்டார், அந்தச் சிறுமி வேறு யாருமல்ல, மறைந்த நமது பாரத பிரதமர் இந்திரா காந்தி. அதன் பின்பு, நாகையாவிற்கு அலகாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
 
அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் 10 நாட்கள் தங்கினார். மகாத்மா காந்தி மற்றும் நேருவின் சுதந்திர வேட்கைப் பேச்சு நாகையாவை வெகுவாகக் கவர்ந்தது. இதன் விளைவாக 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் சுதந்திர போராட்ட வீரராகக் கலந்து கொண்டு தனது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தினார்.
 
மனைவி குறுகிய காலத்தில் இறந்தபோது, நாகையாவுக்கு உலகமே இருண்டதுபோல் இருந்தது. பகவத் கீதையை மீண்டும் மீண்டும் படித்தார். மனைவி இறந்த துக்கத்தை மறக்க நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஒரு சில இசைக் கச்சேரிகள் செய்தார். திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு புறப்பட்ட நாகையா திசை தெரியாமல் திரிந்து இறுதியில் ரமணமகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். ஆசிரமத்துக்குள் நுழைந்தபோது பூலோகத்தில் உள்ள சொர்க்கத்தில் நுழைவதுபோல் இருந்தது என்றார் நாகையா. ஆசிரமத்தில் மகரிஷியைச் சுற்றி நிலவிய ஆழ்ந்த அமைதிதான் என்னை அங்குத் தங்க வைத்தது. மேலும் எனக்குத் தேவையான அமைதியும் ஒய்வும் ஆசிரமத்தில் கிடைத்தன. அங்கிருந்த ஆங்கிலேயர் பால் புருடன் நாகையாவுக்கு நண்பர் ஆனார். இருவரும் மகிழ்ச்சியாக ஆன்மீகத்தில் நாள்களைக் கழித்தனர்.
ஒருநாள் சித்தூரிலிருந்த வந்த நாகையாவின் நண்பன் அவரைப் பார்த்து விட்டு, என்னுடைய படத்துக்கு இசையமைக்க வேண்டும். உடனே என்னுடன் வா என்றான். ஆனால், நாகையாவோ, மகரிஷி உத்தரவு தந்தால்தான் நான் வருவேன் என்று மகரிஷியின் வார்த்தைக்காகக் காத்திருந்தார். மகரிஷியோ நீ செல்லலாம், உனக்கு இது தவிர பல வேலைகள் காத்திருக்கின்றன என்றார். மகரிஷி சொன்ன வார்த்தைகள் அப்போது நாகையாவுக்குப் புரியவில்லை. ஆனால், நண்பனுக்குச் செய்து கொடுத்த இசையமைப்பு நாகையாவைத் திரைப்பட உலகுக்கு அழைத்துச் சென்றது. அதன்பிறகு திரைப்பட உலகில் பேரும் புகழும் நாகையாவுக்குத் தேடி வந்தன. எனக்குப் புதிய வாழ்க்கை கொடுத்தவர் ரமண மகரிஷி என்றார் நாகையா.
 
1938ல் வெளிவந்த “கிருகலக்‌ஷ்மி” என்ற தெலுங்கு திரைப்படத்தில்தான் நாகையாவின் திரைப்பட வாழ்க்கை ஆரம்பித்தது. தமிழில் “அசோக்குமார்” என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார். நாகையா நடித்த மொத்தத் திரைப்படங்கள் 285. அதில் தெலுங்கு 177, தமிழ் 93, மீதமுள்ள படங்கள் மற்ற மொழிப்படங்கள். இது தவிர 29 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 160 பாடல்கள் பாடியுள்ளார்.
 
தெலுங்கில் இவர் நடித்த “தியாகையா” படம் சூப்பர் ஹிட்டான படம். இந்தத் திரைப்படத்தைச் சிறப்புக் காட்சியாக அப்போதைய மைசூர் மாகாணத்தை ஆட்சி செய்த ராஜா குடும்பத்துக்குக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த பின்பு வெள்ளித்தட்டில் 101 தங்கக் காசுகளை வைத்து நாகையாவுக்குப் பரிசாக அளித்தனர் மைசூரி மகாராஜா.
 
தெலுங்கில் வெளிவந்த “பக்த பொத்தன்னா” படத்தைப் பார்த்த நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி டி.ஏ. மதுரம் நாகையாவிடம், நாங்கள் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்கள், ஆனால், கடவுளை உங்கள் ரூபத்தில் காண்கிறோம் என்று சொல்லி, வெள்ளித்தட்டில் பட்டுத் துணிகளை வைத்துக் கொடுத்தனர்.
 
தமிழில் அசோக்குமார், மீரா, சக்ரதாரி, நவஜீவனம், ஏழை படும்பாடு, சர்வாதிகாரி, தாய் உள்ளம், என் வீடு, ராமு, தெய்வமகன், இரு மலர்கள், நம்நாடு, பாவ மன்னிப்பு, ஆலயமணி, பச்சை விளக்கு, பறக்கும் பாவை, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்
 
தென்னிந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் சினிமாக் கலைஞர் என்ற பெருமை சித்தூர் வி. நாகையாவுக்கு உண்டு. சினிமாத்துறையில் பலரும் பத்ம விருது பெற்றதற்காக அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது வாழ்த்த வந்தவர்களிடம் பேசிய நாகையா, மத்திய அரசு தென்னிந்த்தியாவில் உள்ள வயதான சினிமாக் கலைஞனுக்கு அதுவும் தென்னிந்திய மொழிகளில் நடித்த ஒருவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து எனக்குக் கொடுத்திருக்கலாம் என்றார் நாகையா. மேலும், தென்னிந்திய திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இவ்விருதைச் சமர்ப்பணம் செய்வதாக கூறினார்.
 
1943ல் ரேணுகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து “பாக்யலஷ்மி” என்ற படத்தைத் தெலுங்கில் தயாரித்தார். நாகையா தன் திரைப்பட வாழ்க்கையில் இருமுறை குழப்பமான மன நிலையில் இருந்துள்ளார். முதலாவதாக, சென்னை விருகம்பாக்கத்தில், தான் வாங்கிய 52 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோ கட்ட நினைத்தபோது. அந்தக் காலகட்டத்தில்தான், நாகையா ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்துக்கு அருகில் பி.என்.ரெட்டி மற்றும் நாராயணசாமியும் இணைந்து வாகினி ஸ்டூடியோவைக் கட்டிக்கொண்டிருந்தனர். அதனால், குழப்பமான மனநிலையில் இருந்த நாகையா, ஸ்டுடியோ கட்டும் திட்டத்தை கைவிட்டார்.
 
பின்னர், 52 ஏக்கர் நிலத்தையும் விற்றுவிட்டார். ஒரு ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்தில் இரண்டு ஸ்டுடியோக்கள் வந்தன. ஆம் “சியாமளா” மற்றும் “கற்பகம்” ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டன. மீதமுள்ள இடத்தில் ஏவிஎம் நிறுவனம் கல்வி நிறுவனங்களை அமைத்தன. ஆனால், இப்போது, இரு ஸ்டுடியோக்கள் இருந்த இடம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. வாகினி ஸ்டுடியோவும் போரம் விஜயா மாலாக மாறிவிட்டன.
 
நாகையா, “பக்த போதன்னா” என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தயாரிப்பு கம்பெனியை ஆரம்பிக்க வற்புறுத்தினார்கள். மீண்டும் குழப்பம், ஆனால், தன் நண்பரும் வணிகருமான துவ்வூர் நாரயண ரெட்டியுடன் இணைந்து ரேணுகா பிலிம்ஸ் என்ற திரைப்பட கம்பெனியைத் தொடங்கி பாக்யலஷ்மி என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்தார்.
“பாக்யலஷ்மி” தெலுங்குத் திரைப்படம், ஒட்டுமொத்த தெலுங்குப் திரைப்படங்களின் 100வது திரைப்படமாகும்.
 
1945ல் வெளிவந்த “சுவர்க்கசீமா” என்ற தெலுங்குத் திரைப்படத்துக்கு இசை சித்தூர் வி. நாகையா. இப்படத்தில்தான் கண்டசாலவைப் பிண்ணனிப் பாடகராக அறிமுகம் செய்திருப்பார் சித்தூர் வி. நாகையா. 1946ல் தெலுங்கில் வெளிவந்த “ தியாகையா” திரைப்படத்தில்தான் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.
 
1950ல் ஏழை படும் பாடு என்ற தமிழ்ப் படத்தில் நடித்து புகழின் உச்சாணிக்கே சென்றார். இந்தப்படம் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த நாவலின் தழுவலாகும். இந்தப் படத்தைப் பார்த்த புதுச்சேரியில் வாழும் பிரெஞ்சு இன மக்கள், இவருக்கு விழா எடுத்ததாகப் பழம் பெரும் கதை வசனகர்த்தா ஆருர் தாஸ் கூறுகிறார். அந்த விழாவில், பிரெஞ்சு வாழ் மக்களின் சங்கத்துக்கு ரூ.25,000/- கொடுத்ததாக ஆருர்தாஸ் கூறுகிறார்.
இப்படிப் பத்திரிக்கையாளராக, அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாக, சுதந்திரப் போராட்ட வீரராக, திரைப்படத்துறையில் பல்துறை வித்தகராக, இல்லாதவருக்கு கொடுத்து உதவி புரிந்த கொடையாளராக வாழ்ந்து மறைந்த சித்தூர் வி. நாகையா இன்று சென்னை தியாகராயநகரில் உள்ள பனகல் பார்க் அருகில் சிலையாகக் காட்சியளிக்கிறார்.
 
1938-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிருகலெக்ஷ்மி’ தெலுங்குப் படத்தில் கதாநாயகி கண்ணாம்பாவின் சகோதரராக முதன் முதலாக நடித்தார். தொடர்ந்து ’வந்தே மாதரம்’ [1939], சுமங்கலி [1940], தேவதா [1941], தமிழில் அசோக்குமார்’ [1941], பக்த போதனா [1942], ’சொர்க்க சீமா’ [1945], ‘தியாகய்யா’ [1946] போன்ற படங்களில் தமிழிலும் தெலுங்கிலும் சம காலத்தில் நடித்தார்.
தனது 69-ஆவது வயதில் 30.12.1973 அன்று காலமானார்.
 
இளம் வயதிலியே மனைவி காலமாகிவிட்டதால், நாகையா தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. ஒருவேளை குழந்தைகள் இருந்திருந்தால் குறைந்தபட்சம் நாகையாவின் பிறந்த நாளிலாவது சிலைக்கு மாலை அணிவிப்பார்கள். எனவே விஷால் தலைமையில் இயங்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் குறைந்தபட்சம் நாகையாவின் பிறந்த தினமான மார்ச் 28 அன்று அவருடைய சிலைக்கு மாலையிட்டுத் திரைப்படத்துறைக்கு நாகையா ஆற்றிய தொண்டினை நினைவு கூர வேண்டும் என்பதே தென்னிந்திய சினிமா ரசிகர்களின் விருப்பம்.