தென் ஆப்ரிக்காவை பந்தாடியது இந்தியா; 3-0 என முன்னிலை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் கேப்டன் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 124 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக குறைந்தபட்சம் சமன் செய்து சாதித்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா 2-0 என தொடரில் முன்னிலை வகித்தது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் குயின்டன், மார்னே மார்கலுக்குப்பதில் கிளாசன், நிகிடி அறிமுக வாய்ப்பு பெற்றனர். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா ‘வேகத்தில்’ ரோகித் டக்-அவுட்டானார். பின், இணைந்த தவான், கேப்டன் கோஹ்லி சிறப்பாக விளையாடியது. ஷிகர் தவான் (76) அரை சதம் அடித்தார். டுமினி ‘சுழலில்’ ரகானே (11) ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த கோஹ்லி ஒரு நாள் அரங்கில் 34வது சதம் அடித்தார். ஹர்திக் பாண்ட்யா 14, தோனி 10 ரன்களில் திரும்பினர். ஜாதவ் ஒரு ரன் மட்டும் எடுத்தார்.

ரபாடா வீசிய கடைசி ஓவரில் அதிரடி காட்டிய கோஹ்லி ஒரு சிக்சர், பவுண்டரி விளாசி 150 ரன்களை கடந்தார். முடிவில், இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. கோஹ்லி (160), புவனேஷ்வர் (16) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக டுமினி 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (1) சொதப்பினார். கேப்டன் மார்க்ரம் 32 ரன்கள் எடுத்தார். சகால் ‘சுழலில்’ கிளாசன் (6) சிக்கினார். பொறுப்புடன் விளையாடிய டுமினி (51) அரை சதம் கடந்தார். பும்ரா ‘வேகத்தில்’ மில்லர் (25) அவுட்டானார். கிறிஸ் மோரிஸ் (14), ஜோன்டோ (17) நிலைக்கவில்லை. மற்றவர்களும் விரைவில் திரும்ப, தென் ஆப்ரிக்க அணி 40 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக சகால், குல்தீப் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை கேப்டன் கோஹ்லி வென்றார்.

‘ஹாட்ரிக்’ வெற்றியுடன், இந்தியா, 3-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்ரிக்க மண்ணில் தொடரை, முதன் முறையாக சமன் செய்வதை உறுதி செய்து, இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.