தூத்துக்குடி மாநகராட்சிக்கு 18 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ஆளுநர் வழங்கினார்

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் தூய்மை பாரத இயக்கத்திற்காக தூத்துக்குடி மாநகராட்சியில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 குப்பை சேகரிக்கும் வாகனங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை நெல்லையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். அரசு சுற்றுலா ஆய்வு மாளிகையில் ஆளுநரை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தூத்துக்குடி சிவந்தரபுரம் மாநகராட்சி பள்ளிக்கு சென்ற ஆளுநர் அங்கு ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயின்று வரும் மனவளர்ச்சிகுன்றிய மாணவர்களுக்கு பழங்களை வழங்கினார்.

அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் மாணவர்களுடன் தூய்மைக்கான உறுமொழியை எடுத்துக் கொண்டார். பின்னர் தூய்மை பாரத இயக்கத்திற்காக தூத்துக்குடி மாநகராட்சியில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 குப்பை சேகரிக்கும் வாகனங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு சென்ற ஆளுநர் அங்கு தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்ததோடு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார் மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சுற்றுலா ஆய்வு மாளிகைக்கு சென்ற ஆளுநர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரையிலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் ஆளுநர் மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். ஆளுநரின் தூத்துக்குடி வருகையினை முன்னிட்டு தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முகராஜேஸ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.