தீபாவளி சிறப்பு பேருந்துகள் – நாளை முன்பதிவு தொடக்கம்..!

தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் நாளை முன்பதிவு தொடங்குகிறது.

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி வெளியூர்களில் பணி புரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

சென்னையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும், 1200 பேருந்துகளில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு நாளை ஆகஸ்ட் 27ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.

www.tnstc.in மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையின் போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன் அடுத்த 2 வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும், அதன் பிறகு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.