திரை (வைகைப்) புயலின் பிறந்த நாள் இன்று

தமிழ் திரையுலகின் இன்றைய தலைமுறையின் செல்லப்பிள்ளையான நடிகர் வடிவேலுக்கு இன்று பிறந்த நாள்

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். திரையில் மட்டுமல்ல இணையதள மீம்ஸ்களுக்கும் அவர் தான் கடவுள்.

1991ம் ஆண்டில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் அறிமுகமான வடிவேலு 2000த்துக்கு பிறகு தமிழ் சினிமா நகைச்சுவை ஏரியாவை மொத்தமாக ஆக்ரமித்தார் கதாநாயகர்களுடன் சேர்ந்தும் காமடியில் கலக்கும் வடிவேலு பார்த்திபனுடன் ஜோடி போட்டால் அங்கு வெடி (சிரிப்பு) நிச்சயம்.. பல படங்கள் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்காகவே ஓடின

நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர்

அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும் நினைத்து பார்த்தால் கூட சிரிப்பை வரவழைப்பது வடிவேலுவின் காமெடி. வைகைப் புயல் வடிவேலு 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ம் நாள் மதுரையில் நடராச பிள்ளைக்கும், வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.

மதுரையில் கண்ணாடி அறுக்கும் கூலி தொழிலாளியாக பிழைப்பை தொடங்கியவருக்கு ஒருமுறை நடிகர் ராஜ்கிரண் அறிமுகம் கிடைக்க சென்னைக்கு வந்து சேர்ந்த (வைகைப்) புயல் ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.

1991 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்த வடிவேலு போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றினார், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.

2006 ஆம் ஆண்டு சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளி வந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படம் அவருக்கு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. நடிப்பால் தமிழ் திலை உலகிற்கு (சிரிப்பு) மருந்து அளித்த வைகைப் புயல் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று…