திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி ஆகியோர் நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஊர்வலத்தில் பக்தர்கள் கோலட்டம் பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர். பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன் மலையப்ப சுவாமி முன்னிலையில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷத்தலு, ஆகம ஆலோசகர் சுந்தரவதன பட்டாச்சார்யா முன்னிலையில் வேத மந்திரங்கள் முழுங்க கருட கொடியை கொடிமரத்தில் ஏற்றினர். இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதின் மூலம் சகல தேவதைகளையும் அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்‌ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முக்கோட்டி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம்.