தாமிரபரணி புஷ்கரம்  பாபநாசத்தில் ஆளுநர் புனித நீராடினார்.

குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள் செய்து தாமிரபரணி நதிக்கு ஆரத்தி வழிபாடு செய்யப்படவுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர விழா பூஜைகள் நடைபெற உள்ளது. புஷ்கர விழாவிற்காக நெல்லை அருகன் குளம் ஜடாயு தீர்த்தம், செப்பறை கோவில், மணி மூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித் துறைகள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து அங்குள்ள படித்துறையில் புனித நீராடிய ஆளுநர், பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி எடுத்து, ஆளுநர் பூஜையை தொடங்கி வைக்கிறார்.