தர்மபுரியில் மாணவி மாயமான விவகாரம்: 30 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல்: மோதல் அபாயம் போலீஸ் குவிப்பு

தர்மபுரி அருகே கல்லூரி மாணவி மாயமான விவகாரத்தில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுதொடர்பாக ஒரு வீட்டிலிருந்த 30 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.  தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அம்பேத்கர்நகரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி.  இவரது மகன் ராஜ்குமார்(21). பிளஸ் 2வில் தோல்வியடைந்ததால், மேற்கொண்டு படிக்காமல், மாநில அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கல்லூரிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.  இதையறிந்த மாணவியின் பெற்றோர், ராஜ்குமார் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே கல்லூரிக்கு தொடர் விடுமுறை அறிவித்ததால், வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு, விடுதியில் இருந்து புறப்பட்ட மாணவி, வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர், கல்லூரி நிர்வாகம் மற்றும் அவரது தோழிகளிடம் விசாரித்தனர்.

பின்னர், அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி தங்களது மகளை ராஜ்குமார் கடத்தி சென்று விட்டதாக, அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ராஜ்குமாரின் உறவினர்களுக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெரும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்ற தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் தலைமையில், 3 டிஎஸ்பிக்கள், தர்மபுரி மற்றும் அதியமான்கோட்டை போலீசார் நல்லம்பள்ளிக்கு விரைந்தனர்.

மேலும், ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர். இருதரப்பையும் சமாதானப்படுத்திய போலீசார் ரகசிய தகவலின்பேரில் அங்குள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.  பெட்ரோல் குண்டுகளை பதுக்கியதாக அம்பேத்கர்நகரை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.