தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்ட மாட்டோம் கேரள அரசு உறுதி

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு உறுதி அளித்துள்ளது. முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து 366 கிமீ தொலைவில் புதிய அணை கட்டுவதற்காக விரிவாக ஆய்வு நடத்த அனுமதி அளித்த மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கு பிறகும் வீணாக புரளிகளை கிளப்பி அணை பாதுகாப்பு தொடர்பாக அவ நம்பிக்கைகளை கேரள அரசு எழுப்பி வருகிறது எனவும் இது முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிரானது என்பதால் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த மாதம் 4ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் விரிவான திட்ட அறிக்கையை கேரள அரசு தயார் செய்ததாக தமிழக அரசு புகார் செய்தது.

இதனிடையே தமிழக அரசின் இந்த பதிலுக்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றும் மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை மட்டுமே திரட்டி வருகிறோம் என்றும் கேரள அரசு தெரிவித்தது.

மேலும் தமிழக அரசின் அனுமதி இன்றி புதிய அணை கட்டமாட்டோம் என்று கேரள அரசின் பதிலை ஏற்ற உச்சநீதிமன்றம், புதிய அணை கட்ட தகவல்களை திரட்ட அனுமதி அளித்துள்ளது.மேலும் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.