தமிழகத்தின் திட்டங்களை பிரதமர் துவக்கி வைப்பது அவமானம்: மார்க்சிஸ்ட் கண்டனம்

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து துவக்கி வைத்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும். தமிழகத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. தமிழக அரசு கோரிய வறட்சி, வெள்ளம், கஜா புயல் நிவாரண நிதி வழங்க மறுப்பு, காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு ஒப்புதல் போன்ற பல செயல்களைக் குறிப்பிட முடியும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்குக் கூட வர மறுத்தவர்தான் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி என்பது மறக்க முடியாததாகும்.

2018 -2019ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் மத்திய அரசின் தமிழக விரோதப்போக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான பொருட்கள், மற்றும் சேவை வரி 2017-2018ம் ஆண்டில் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூபாய் 5454 கோடி, பொருட்கள் மற்றும் சேவை வரிகள் தமிழகத்திற்கான பங்கில் ரூ.455.16 கோடி மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.560.15 கோடி, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.3852.17 கோடி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பாக்கித்தொகை ரூ.985.08 கோடி ஆகிய தொகைகளை மத்திய அரசு வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து மாநிலத்தின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. இத்தகைய வரலாற்று அநீதிகளை மத்திய மோடி அரசு இழைத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, அவரை அழைத்து தமிழகத்தில் விழா எடுப்பதானது எட்டி உதைக்கும் காலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதற்கு சமமாகும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.