டிவிஎஸ் தலைவரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்கும் பணிகளை, டிவிஎஸ் குழுமம் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் புனரமைப்பின் போது, முறை கேடு நடந்ததாகவும், அங்கிருந்த கோவில் சிலைகள், புராதன பொருட்கள் காணாமல் போனதாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சூழலில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்றும், 2004ல் கோவில் புனரமைப்பு நடந்த போது, அறப்பணிகள் குழு உறுப்பினராக தான் சேர்க்கப்பட்டதாகவும், தனது சொந்த செலவில் ரூ.70 லட்சத்தில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் 6 வார காலத்திற்கு அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.  நீதிமன்றம் விதித்திருந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில் வேணு ஸ்ரீனிவாசனை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வருகின்ற 23ம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.