டிசம்பர் முதல் ரிலையன்ஸ் ஜியோ பேமென்ட் பேங்க் ?

ரிலையன்ஸ் ஜியோ பேமென்ட் பேங்க் டிசம்பர் மாத வாக்கில் துவங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜியோவின் பேமென்ட் பேங்க் சேவையானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.முன்னதாக வெளியான தகவல்களில் பேமென்ட் பேங்க் சேவையானது அக்டோபர் மாத வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சீரான சேவையை வழங்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தக் கோரி மத்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதால் வெளியீடு தாமதமானதாக கூறப்படுகிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவைகளை வழங்குவதோடு, மத்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும். இத்துடன் ஜியோவின் சேவை விளக்கங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும்படி இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வங்கி சேவைகளை வழங்குவது நிறுவனத்தின் நோக்கம் கிடையாது என்றும் இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.பேமென்ட் பேங்க் சேவையை வழங்குவதற்கென 2015, ஆகஸ்டில் மத்திய வங்கி ஜியோவிற்கு அனுமதி வழங்கியிருந்தது. 2017, ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இத்துடன் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக இந்தியாவின் அதிவேக 4ஜி நெட்வொர்க் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது.சமீபத்தில் வெளியான தகவல்களின் படி நாட்டில் அதிவேக 4ஜி மற்றும் 3ஜி டவுன்லோடு வேகங்கள் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளததாக ஓபன்சிக்னல் தெரிவித்தது. எனினும் நாடு முழுக்க சுமார் 95.6 சதவிகிதம் அளவு ரிலையன்ஸ் ஜியோ சிறப்பான எல்டிஇ சேவையை வழங்குகிறது. ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களில் 57.2 சதவிகிதம் பேர் மட்டுமே 4ஜி சிக்னல் பெற முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.