ஜவுளித்துறையின் மேம்பாட்டிற்காக ஜி.எஸ்.டி வரி மேலும் குறைக்கப்படும் எனவும் சிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி.வரி எளிமையாக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி

ஜவுளித்துறையின் மேம்பாட்டிற்காக ஜி.எஸ்.டி வரி மேலும் குறைக்கப்படும் எனவும் சிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி.வரி எளிமையாக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

கோவை கொடிசியா மைதானத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.இராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் மகேந்திரன், திருப்பூர் அதிமுக வேட்பாளர் ஆனந்தன், நீலகிரி அதிமுக வேட்பாளர் தியாகராஜன் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளதாகவும், சிறுபான்னையினருக்கு நன்மை செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை எதிர்கொள்வதாகவும் ஆனால் ஸ்டாலினை தவிர வேறு எந்த கட்சியும் ராகுலை பிரதமராக ஏற்க மறுப்பதாகவும் விமர்சித்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, வணக்கம் எனவும் மருதமலை முருகனுக்கு அரோகரா எனவும் கூறி தனது உரையை துவங்கினார். தேசியவாதியாக இருப்பது தவறா என கேள்வி எழுப்பிய அவர் தேசியவாதம் தான் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம், 42 கோடி பேருக்கு பென்சன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்ததாகவும் தேசியவாதியாக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம் எனவும் கூறினார். நடுத்தரவர்க்கத்தினரை காங்கிரஸ் கண்டு கொள்வதில்லை எனவும் ஆனால் அவர்களை கவனத்தில் கொண்டு முத்ரா வங்கி, குறைந்த வட்டியில் எளிய கடன் வசதி, 5 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு வரிவிலக்கு உள்ளிட்டவற்றை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் பாரம்பரியத்தை சிதைப்பதாக சாடிய அவர் பாஜக கேரள மக்களுடன் உடனிருக்கும் எனவும் கூறினார். ஜவுளித்துறைக்கான ஜி.எஸ்.டி வரி ஆலோசனைகள் பெற்று குறைக்கப்படும் எனவும் சிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி. வரி எளிமையாக்கப்பட்டு உள்ளதாகவும், நாட்டில் விசைத்தறியாக உயர்த்தப்பட்ட 2 லட்சம் கைத்தறிகளில் 66 சதவீதம் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நதிகள் இணைப்பிற்கு தனி அமைச்சகம் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் 21 ம் நூற்றாண்டில் பிறந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வாக்களித்தால் எப்போதும் அதனை நினைவில் வைத்திருக்க முடியும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

பிரதமரின் உரையில் பணமதிப்பிழப்பு குறித்த எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. இக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதே போல் பாமக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை.

இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.