செய்தி துளிகள்…

✴??✴அஞ்சலக கணக்கு; ஆதார் கட்டாயம்

சென்னை : அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், டிச., 31க்குள் தங்களின் ஆதார், மொபைல் போன் எண் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இது குறித்த அஞ்சல்துறை அறிவிப்பு: மத்திய அரசு உத்தரவுப்படி, டிச., 31க்குள், அஞ்சலக கணக்குகளுடன் ஆதார், மொபைல் எண்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்திய அஞ்சல்துறை, இதற்கான பணியை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, இந்திய அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டை நகலுடன், மொபைல் போன் எண், அஞ்சல கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அஞ்சலகத்திலோ, தபால்காரர்களிடமோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

✴??✴திறந்தவெளியில் படுக்க வைக்கப்பட்ட குழந்தைகள்; நெல்லையில் அவலம்

திருநெல்வேலி: டெங்கு பாதித்த 70 குழந்தைகளை திறந்தவெளியில் படுக்கவைக்கப்பட்ட அவலம் நெல்லை அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 70 குழந்தைகள் திறந்தவெளியில் படுக்கவைக்கப்பட்டனர். இதனையடுத்து அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை பெற்று வந்த அறையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று(நவ.,25) நடைபெறவிருப்பதாகவும், அதற்காக அறையை தயார் செய்வதற்காக டெங்கு பாதித்த குழந்தைகள் அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே திறந்தவெளிக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

✴??✴பாக்.,கில் பயங்கரவாதம் தழைப்பது நிரூபணம்’: இந்தியா குற்றச்சாட்டு

புதுடில்லி: ‘ஜம்மு – காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் பயங்கரவாதி, ஹபீஸ் சயீது பேசியுள்ளதன் மூலம், பாகிஸ்தானில் பயங்கரவாதம் தழைத்து வருவது நிரூபிக்கப்பட்டு உள்ளது’ என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 

மும்பையில், 2008ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீதை, அந்த நாட்டு நீதிமன்றம் விடுவித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அவன், ‘காஷ்மீர் மக்கள் விடுதலை பெறுவதற்கு, பாகிஸ்தானில் ஆதரவு திரட்டி வருகிறேன்’ என, கூறியுள்ளான்.

 

இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை உயரதிகாரி கூறியதாவது: ஜம்மு – காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். ஹபீஸ் சயீதின் பேச்சு, பாகிஸ்தானில் பயங்கரவாதம் தழைத்து கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதுபோன்ற பேச்சுகளுக்கு, நம் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

 

✴??✴உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு

புதுடில்லி: இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளுக்கான விலை, 6 முதல், 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் விலையை நிர்ணயிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்தகள் விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், ‘அல்டிபிளாசி’ விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

 

✴??✴நோட்டா’ வழக்கை விசாரிக்க மறுப்பு

புதுடில்லி: யாருக்கும் ஆதரவில்லை என்பதை குறிக்கும் வகையில், ‘நோட்டா’வுக்கு அதிக ஓட்டுகள் பதிவானால், அந்தத் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., பிரமுகருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஒரு தொகுதியில், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை குறிக்கும் நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவானால், அந்தத்தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வாதத்தை ஏற்கவில்லை. அதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக உபாத்யாய் கூறினார். அதற்கு அமர்வு அனுமதி அளித்தது.

 

✴??✴சென்னை: பள்ளிகள் இன்று செயல்படும்

சென்னை : மழைக்கால விடுமுறையை ஈடுகட்ட, சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று(நவ.,25) பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழையால், சென்னையின் புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே, பள்ளிகளுக்கு, அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுவரை, ஐந்து வேலை நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறையை ஈடுகட்ட, சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டனர். அதன்படி, சனிக்கிழமையான இன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.

 

✴??✴போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: குஜராத்தில், 2002ல் நடந்த வன்முறையின் போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

குஜராத்தில், கடந்த 2002ல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, வன்முறை சம்பவங்கள் நடந்தன. அதில், குடும்பத்தாருடன் தப்ப முயன்ற, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை, சிலர் பலாத்காரம் செய்தனர். அவருடைய இரண்டரை வயது மகள் உட்பட, குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், சாட்சியத்தை மாற்றியது, பொய் மருத்துவ பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்தது போன்ற குற்றங்களுக்காக, ஐந்து போலீசார், இரண்டு டாக்டர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அக்., 23ல் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமர்வு உத்தரவிட்டதாவது: போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, மாநில அரசு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. அதனால், ஆறு வாரங்கள் அவகாசம் தரப்படுகிறது. 2018 ஜனவரியில், இந்த வழக்கு விசாரிக்கப்படும். கூடுதல் இழப்பீடு கேட்டு, பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கின் விசாரணை, அடுத்த வாரம் நடைபெறும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.