செண்பகவல்லி அணை சீரமைக்கப்படுமா…? தமிழ்த் தேசியப் பேரியக்கம்

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக – கேரள எல்லையில் 1773ஆம் ஆண்டு கட்டப்பட்டது செண்பகவல்லி அணை.  அணையிலிருந்து 2 கால்வாய்கள் மூலம், வாசுதேவநல்லூர், சிவகிரி, கரிவலம் வந்தநல்லூர், திருவேங்கடம், வெம்பக்கோட்டை பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவையையும் செண்பகவல்லி அணை நிறைவு செய்தது.

1950 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் செண்பகவல்லி அணை உடைந்து, தண்ணீரின் போக்கு முல்லைப் பெரியாறு நோக்கி திரும்பியது.  அணை சீரமைக்கப்பட்ட பின்  1969-ஆம் ஆண்டு மீண்டும் இடிந்தது. அணையை சீரமைக்க 1984-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தமிழகத்தின் பங்குத் தொகையாக 11 லட்சம் ரூபாய் கேரளாவிடம் அளிக்கப்பட்டும்  பணி தொடங்கவே இல்லை.

இந்நிலையில் அணையை கேரள அரசு சீரமைக்க வேண்டுமென கோரி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில், 8 வாரங்களில் அணையை செப்பனிட வேண்டுமென கேரள அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

2006ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியான போதும், கேரள  அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனது செண்பகவல்லியை அணை புதிதாக கட்டப்பட வேண்டும் என்ற கனவு நனவாகுமா தமிழக அரசு இச்சிக்கலில் உடனடியாக தலையிட்டு  செண்பகவல்லி தடுப்பணையை சீரமைத்து தருமாறு கேரள அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது