சூர்யாவின் கூட்டத்திற்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் – தானா சேர்ந்த கூட்டம்.

ஜனவரி 12 அன்று வெளியாகும் இப்படம் குறித்து ஒரு பேட்டியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது: நானும் ரெளடி தான் படத்துக்குப் பிறகு ஞானவேல் ராஜா ஒரு படம் பண்ண அழைத்தார். நேரம் குறைவாக இருந்ததால் என்னுடைய சொந்தக் கதை இல்லாமல் ஸ்பெஷல் 26 படத்தின் அதிகாரபூர்வமாக உரிமம் வாங்கி ரீமேக் செய்துள்ளோம். பொழுது போக்கை மனத்தில் வைத்துக் படம் இயக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் “ஸ்பெஷல் 26” ஹிந்தி படத்தை தென்னிந்திய மொழிகளில் இயக்க உரிமை பெற்றுள்ளதால் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் பிரசாந்தின் தாய் சாந்தி தியாகராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து இதற்குப் பதில் அளித்த படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ரீமேக் உரிமையை ஆர்பிபி நிறுவனத்திடம் பெற்றதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். ஞானவேல் ராஜாவின் இந்த விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

பிரசாந்தின் தாய் சாந்தி தியாகராஜன் தொடுத்த இடைக்கால வழக்கை முடித்து வைப்பதாகவும் அறிவித்துள்ளது இதனால் ஜனவரி 12 அன்று தானா சேர்ந்த கூட்டம் படம் எவ்விதச் சிக்கலுமின்றி வெளியாகவுள்ளது.