சிறுபான்மையினர்கள் கல்வி உதவித்தொகை பெற…

ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு பயிலும் சிறுபான்மையினர்கள் கல்வி உதவித்தொகை பெற செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் 2018-19 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவ-மாணவிகள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மிகுந்த கவனத்துடன் விடுபடாமல் பூர்த்தி செய்து கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விளம்பரங்கள் http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm. என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.