சார்லஸ் டார்வின் பெர்த்டே இன்னிக்குதான்..

காலில் பிறந்தவன்.. தலையில் பிறந்தவன்.. தோளிள் பிறந்தவன்.. வயிற்றில் பிறந்தவன்.. என்று சொன்னவனை விரட்டி அடித்து…அனைவரும் பெண் என்ற மனித ஜீவிகளிடம் இருந்தே வருகிறோம் என்று உரக்கச் சொல்லி உலகின் கண்ணை திறந்த சார்லஸ் டார்வின் பிறந்த நாள் இன்று ….

கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? இந்தக் கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானதுதான், இல்லையா? இதே கேள்வி அந்தக் கால விஞ்ஞானிகள் பலருக்கும் வந்தது.

மனுஷன் எப்படித் தோன்றியிருப்பான் அப்படீங்கிற கேள்வி பல விஞ்ஞானிகளுக்கு வந்தது இயல்புதானே. 19-ம் நூற்றாண்டு வரைக்கும் பலருக்கும் இதுக்குத் துல்லியமான பதில் கிடைக்கல. 19-ம் நூற்றாண்டுல பிரிட்டன்ல உள்ள ஷ்ரூஸ்பரிங்கிற இடத்தைச் சேர்ந்த சார்லஸ் டார்வின்தான் இதுக்குத் திட்டவட்டமான பதிலைக் கண்டுபிடிச்சார்.

டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்.

தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை. சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின். படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது.

மனிதர்கள், குரங்கு இனத்தின் வாரிசுகள். வாலில்லா குரங்குக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்று அவர் கூறினார். இதை எப்படி அவர் கண்டுபிடிச்சார்? அது ஒரு சுவாரசியமான கதை. அதிலும் குறிப்பா அவர் இளைஞனா இருந்தப்போ, பீகிள்கிற கப்பல்ல ஐந்து வருஷம் உலகத்தைச் சுத்தினார். அப்போ கிடைச்ச அனுபவ அறிவு, அறிவியல் அறிவுதான் அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம்.

ஆரம்பத்துல டார்வினோட அப்பா, டார்வினை டாக்டருக்குப் படிக்க அனுப்பினார். ஆனால், டார்வினுக்கு அது பிடிக்கலை, இயற்கையை ஆராய்ச்சி பண்றதுலதான் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால, டாக்டருக்குப் படிப்பை விட்டுட்டு வந்துட்டார்.டார்வின் மேல அக்கறையா இருந்த கேம்ப்ரிட்ஜ் தாவரவியல் பேராசிரியர் ஹென்ல்ஸோ, 1831-ல் டார்வினுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதுல ‘பீகிள்கிற கப்பல்ல, இயற்கை ஆராய்ச்சியாளரா போறதுக்குத் தயாரா’ன்னு அவர் கேட்டிருந்தார். ஆனா, அந்தக் கப்பல்ல போறதுக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. டார்வினோட அப்பா, கப்பல்ல போக ஒத்துக்கல. டார்வினோட மாமா ஜோசியா வெட்ஜ்வுட்தான், பீகிள் கப்பல்ல போறதுக்கு டார்வினோட அப்பாவ சம்மதிக்க வச்சார்.

இந்தப் பயணத்தில் தனக்குக் கிடைத்த அனைத்து உயிரினங்களையும் டார்வின் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிய வர்ணனையை எழுதியும் வைத்தார். ஆரம்பத்தில் பறவைகளையும் உயிரினங்களையும் சுட்டுப் பிடிப்பதில் ஆர்வம் காட்டிய டார்வின், பின்னர் ஒவ்வொரு பகுதியையும் உற்றுநோக்குவதிலும் அப்பகுதி ஏன் அப்படி இருக்கிறது என்பதற்கான காரண, காரியத்தைத் தேடுவதிலும் செலவிட்டார்.

இது அவருடைய அறிவை வளர்த்தது. கப்பல், குதிரை, நடை என்று ஒவ்வொரு பகுதியிலும் வாய்ப்பு கிடைத்த வழிகளில் எல்லாம் பயணம் செய்து இயற்கையை உற்று நோக்கினார்.

இயற்கை அறிவியல் தொடர்பாக நிறைய வாசிச்சார். அது மட்டுமில்லாமல், அவர் செஞ்ச இன்னொரு முக்கியமான விஷயம் தினசரி தனது டைரியை எழுதியதுதான். பார்த்த அனைத்து விஷயங்களையும் விட்டுவிடாமலும், விரிவாகவும் எழுதி வைத்தார்.

அவருடைய எழுத்தும் வாசிப்பும் புதிய புரிதல்களை ஏற்படுத்தின. லயல் என்பவரின் புவியியல் பற்றிய எழுதிய புத்தகம், மால்தூஸின் மக்கள்தொகை கொள்கை போன்றவற்றைப் படித்ததால்தான், பரிணாமவியல் கொள்கையை டார்வினால் உருவாக்க முடிந்தது.

காலபகஸ் தீவுகளில் உள்ள உயிரினங்களின் வெவ்வேறு வகைகள், குறிப்பாக உண்ணும் உணவுக்கு ஏற்ப தினைக் கருவிகளின் அலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இயற்கைத் தேர்வு (Natural selection), உயிரினங்களின் தகவமைப்பு (Adaptation), பரிணாமவியல் கொள்கை (Evolution theory) ஆகியவற்றை டார்வின் உருவாக்கினார்.

கப்பலில் இருந்தபோதே பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அவர் எழுதிய கடிதங்கள், கேம்பிரிட்ஜ் தத்துவச் சிந்தனையாளர்கள் பேரவையில் விநியோகிக்கப்பட்டன. டார்வினுடைய கட்டுரை, டார்வின் சேகரித்த எலும்புகள் மீது பண்டையவியல் ஆராய்ச்சி யாளர்கள் காட்டிய ஆர்வம் ஆகியவற்றின் காரணமா முன்னணி அறிவியலாளர்கள் மத்தியில் டார்வினுக்கான இடம் உறுதி செய்யப்பட்டது.

ஐந்து ஆண்டு பீகிள் கடற்பயணத்தை முடித்துக்கொண்டு டார்வின் நாடு திரும்பினப்ப, தீவிர கள ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்ட ஒரு விஞ்ஞானியா அவர் மாறியிருந்தார். தன்னுடைய கடற்பயணம் குறித்து அவர் எழுதிய ‘பீகிள் கடற்பயணம்’ என்ற அவருடைய முதல் புத்தகம் உலகப் புகழ்பெற்றது.

இளைஞரா இருந்தாலும் அறிவியலாளர்கள் மத்தியில், தான் மதிக்கப்பட வேண்டும் என்று டார்வின் நினைத்தார். தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் ஆர்வத்துடன் தீவிரமாக உழைத்து, தன் உடலை வருத்திக்கிட்டு வேலை பார்த்தார். தனது கண்டறிதல், கொள்கைகளை ஆதாரப்பூர்வமா முன்வைச்சார்.

‘பரிணாமவியலின் தந்தை’ என்று இன்றைக்கு அவர் போற்றப்படுகிறார். ஆனால், பரிணாமவியல் கொள்கையை முதன்முதலா அவர் சொன்னப்ப, எப்படியெல்லாம் அவருக்கு எதிர்ப்பு வந்துச்சு தெரியுமா? அவர் சொன்னதை விஞ்ஞானிகள் சிலர் ஏத்துக்கிட்டாங்க. ஆனா, பழமையில் ஊறிய பல மத நம்பிக்கையாளர்கள் டார்வினை எதிரியா பார்த்தாங்க. அவரைத் தூற்றினாங்க. அவரைக் குரங்காவே வரைஞ்சு, அவமானப்படுத்த நெனைச்சாங்க.

ஆனா, டார்வின் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படல. தன்னுடைய கொள்கைக்கு ஆதாரம் இருக்குங்கிறபோது, இதையெல்லாம் கண்டு உணர்ச்சிவசப்பட்டுக் கருத்து சொல்லக் கூடாதுன்னு பேசாம விட்டுட்டார். அன்றிலிருந்து இன்றுவரை டார்வினோடப் பரிணாமவியல் கொள்கையைத்தான் உலகம் முழுவதும் உள்ள குழந்தைங்க, ஆராய்ச்சியாளர்கள் படிக்கிறாங்க.

அன்றைக்கு எதிர்ப்பைப் பார்த்து அவர் பேசாம ஒதுங்கியிருந்தா, அவருக்குப் பின்னாடி இன்னைக்கு உலகம் கண்டுபிடிச்சிருக்கிற பல அரிய விஷயங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும், இல்லையா?