சத்தீஷ்கரில் ரூ.7.37 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சத்தீஷ்கர் மாநிலம் மகாசமுந்த் ((Mahasamund)) மாவட்டத்தில் 7 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், 7 பேரையும் கைது செய்துள்ளனர். மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிர்தா பஜார் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்ற காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அதிலிருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காரை சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக, 2000 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, காரில் இருந்த 4 பேரை கைது செய்து விசாரித்த போலீசார், அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேரை கைது செய்ததுடன், கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும், கள்ளநோட்டுகளை மாற்றி வைத்திருந்த 6 லட்சம் ரூபாயையும் போலீசார் கைப்பற்றினர்.