சட்டபேரவையில் இன்று

சட்டசபையில் இன்று முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அம்மா வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது 
பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர் இதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

 

சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் எரிக்கப்பட்ட அரசாணை திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, திமுக ஆட்சிக்காலத்திலும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதாகவும், ஆனால் எந்த அரசு ஊழியரும் கைது செய்யப்படவில்லை என்றார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் போதுமான விளக்கத்தை அளித்து விட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

 

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் பிரச்சினை குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும் போது , போராட்டம் நடத்தியவர்களிடம் முதலமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த முன்வராதது ஏன் என கேள்வி எழுப்பினார்.. அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் . அதற்கு பதில் அளித்து  பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ,  தமிழக அரசின் வேண்டுகோளையும் , உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததாகவும் ஜெயகுமார் தெரிவித்தார். மொத்தம் 86 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் 6527 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர்,  வழக்கின் தன்மையை ஆய்வு செய்து அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

 

பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, திமுக உறுப்பினர் முருகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, துணை மின் நிலையங்களை அமைக்கவும், மின் அலுவலகங்கள் கட்டவும் பலரும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் அதற்கான நிலங்களை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். எனினும் வனத்துறையின் அனுமதி பெற்று தேவையான இடங்களில் மின் அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் பழனி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் அதற்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்து, அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மயிலாப்பூர் தொகுதி உறுப்பினர் நட்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடங்கள், பார்வையற்றவர்களுக்கான ஒரு விழுக்காடு இடங்களும் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வருகிறது உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு முடிவுக்கு வந்த பிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.